உலக டென்னிஸ் தரவரிசை: ஜோகோவிச், ஆஷ்லி பார்ட்டி முதலிடத்தில் நீடிப்பு.
உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் ஜோகோவிச், ஆஷ்லி பார்ட்டி முதலிடத்தில் நீடிக்கின்றனர். பெரேட்டினி, கிரெஜ்சிகோவா முன்னேற்றம் கண்டுள்ளனர்.
உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் மெல்போர்னில் நுழைய தடை விதிக்கப்பட்டதுடன் விசா ரத்து செய்யப்பட்டு சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டதால் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாட முடியாமல் போன செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் (11,015 புள்ளிகள்) மாற்றமின்றி முதலிடத்தில் தொடருகிறார். அவர் நம்பர் ஒன் இடத்தில் 358-வது வாரமாக நீடிக்கிறார்.
ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டியில் போராடி தோல்வி கண்ட ரஷியாவின் டேனில் மெட்விடேவ் (10,125) 2-வது இடத்திலும், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 3-வது இடத்திலும், சிட்சிபாஸ் (கிரீஸ்) 4-வது இடத்திலும், ஆஸ்திரேலிய ஓபனை வென்றதன் மூலம் 21-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை ருசித்து சரித்திரம் படைத்த ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 5-வது இடத்திலும் நீடிக்கிறார்கள்.
ஆஸ்திரேலிய ஓபனில் அரைஇறுதிக்குள் நுழைந்ததன் மூலம் இத்தாலியின் பெரேட்டினி ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார். அவரது சிறந்த தரநிலை இதுவாகும். 3-வது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறிய ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா) ஒரு இடம் சரிந்து 7-வது இடம் பெற்றுள்ளார். கேஸ்பர் ரூட் (நார்வே) 8-வது இடத்திலும், அலியாசிம் (கனடா) 9-வது இடத்திலும், ஜானிக் சின்னெர் (இத்தாலி) 10-வது இடத்திலும் உள்ளனர்.
ஆஸ்திரேலிய ஓபனில் கால்இறுதிக்கு தகுதி பெற்ற ஷபோவாலோவ் (கனடா) 2 இடம் உயர்ந்து 12-வது இடத்தையும், மான்பில்ஸ் (பிரான்ஸ்) 4 இடம் அதிகரித்து 16-வது இடத்தையும் அடைந்துள்ளனர். காயம் காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு மேலாக விளையாடாமல் ஓய்வு எடுத்து வரும் 40 வயதான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 13 இடங்கள் சறுக்கி 30-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை முதல்முறையாக உச்சி முகர்ந்து உள்ளூர் ரசிகர்களின் 44 ஆண்டு கால ஏக்கத்தை தீர்த்த ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி (8,331 புள்ளிகள்) முதலிடத்திலும், பெலாரஸ் வீராங்கனை சபலென்கா (5,698) 2-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.
கால்இறுதிக்கு தகுதி பெற்ற பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான பார்போரோ கிரெஜ்சிகோவா (செக்குடியரசு) ஒரு இடம் ஏற்றம் கண்டு 3-வது இடத்தையும், அரைஇறுதிக்குள் அடியெடித்து வைத்ததால் போலந்தின் ஸ்வியாடெக் 5 இடங்கள் உயர்ந்து 4-வது இடத்தையும் பிடித்தனர். கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), பாலோ படோசா (ஸ்பெயின்) முறையே 5-வது, 6-வது இடத்தில் தொடருகின்றனர். 2-வது சுற்றில் தோல்வி அடைந்த முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 4 இடங்கள் சரிந்து 7-வது இடத்தை பெற்றுள்ளார்.
மரியா சக்காரி (கிரீஸ்) 8-வது இடத்தில் நீடிக்கிறார். எஸ்தோனியாவின் கோன்டாவெய்ட் 2 இடம் சறுக்கி 9-வது இடத்தையும், இறுதிப்போட்டி வரை முன்னேறிய அமெரிக்க வீராங்கனை டேனியலி காலின்ஸ் 20 இடங்கள் எகிறி 10-வது இடத்தையும் பிடித்துள்ளனர். அவர் ‘டாப்-10’ இடங்களுக்குள் வந்து இருப்பது இதுவே முதல்முறையாகும்.