யாழ்ப்பாண மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம்.
யாழ்ப்பாண மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில், மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் “மக்கள் விவசாய நிலங்களினை முழுமையாக பயன்படுத்த வேண்டுமெனவும், விவசாய நிலங்களில் கட்டிடங்கள் அமைப்பதற்கான அனுமதி கோரும் பட்சத்தில் அதற்கான அனுமதியை வழங்கும் திணைக்களங்கள் உரியவகையில் ஆராய்ந்து தோட்டக் காணிகளினை பாதுகாத்தலிற்கு முன்னுரிமை வழங்கி தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்தார்.
மேலும், விவசாயிகளுக்கான காப்புறுதித் திட்டங்கள் முறையாக செயற்படுத்தப்படுவதோடு, வங்கிகள் விவசாயிகளிற்கு கடன் வழங்கும் போது அதுபற்றிய பொதுவான விழிப்புணர்வுகளை அவர்களுக்கு வழங்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
அத்துடன், அதிக விலைக்கு கிருமிநாசினிகள், உரங்களினை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, பசுமை விவசாயம் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அவர்களுடன் விவசாய அமைப்புக்கள் சேர்ந்து பசுமை விவசாயத்தினை
பலப்படுத்த வேண்டுமெனவும், அடுத்த போகத்தினை செயற்படுத்த முன்கூட்டியே பிரதேச மட்ட விவசாய அமைப்புக்களினை ஒன்று கூட்டி செயற்பாடுகளை முன்னெடுக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இக் கலந்துரையாடலில் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் திருமதி ச. கைலேஸ்வரன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், விவசாயிகளிடத்தில் வெங்காயம், மிளகாய், உருளைக்கிழங்கு, இஞ்சி, மஞ்சள் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ளுதல், விவசாயிகளினை தெரிவுசெய்து அவர்களுக்குரிய பயிற்சிகள் வழங்குதல், இதனூடாக வேலைவாய்ப்பு பிரச்சினைகள் மற்றும் வறுமையினை இல்லாதொழித்தல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் தெரிவித்தார்.
மேலும், இக் கலந்துரையாடலில் வீட்டுத்தோட்டம், நெற்கொள்வனவு, மானியத்திட்டங்களை விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கையெடுத்தல், பிரதேச மட்டத்தில் விவசாயக் குழுக்களை உருவாக்கல், இளைஞர் நிகழ்ச்சித்திட்டங்களை உருவாக்குதல் தொடர்பிலும் ஆராயப்பட்டது.