மீனவர் பிரச்சினைக்கு உரிய தீர்வு! – அரசின் நிலைப்பாடு இதுவே என்கிறார் பஸில்.
“இலங்கை – இந்திய மீனவர்கள் கடலில் முட்டிமோதுவதை நாம் விரும்பவில்லை. இதற்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாகவுள்ளோம்.”
– இவ்வாறு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்ப்பாணம் மாவட்ட மீனவர்கள் கடந்த 3 நாட்களாகத் தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இது தொடர்பில் பஸில் ராஜபக்ச கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“யாழ்ப்பாணம் மாவட்ட மீனவர்களின் ஜனநாயகப் போராட்டங்களை நாம் மதிக்கின்றோம். ஆனால், இந்தப் போராட்டங்கள் வன்முறை வழிக்குச் செல்லக்கூடாது.
இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை நீண்டகாலமாகத் தொடர்கின்றது. மீனவர்கள் பலர் உயிரிழந்தும் தாக்கப்பட்டும் உள்ளனர். இது தொடரக்கூடாது. இதற்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டும்.
இது தொடர்பில் இந்திய அரசுடன் நாம் பேச்சுக்களை முன்னெடுத்துள்ளோம். இந்தப் பேச்சுக்களைத் தொடர்ந்து முன்னெடுப்போம்.
இரு நாட்டு மீனவர்களும் கடலில் முட்டிமோதுவதை நாம் விரும்பவில்லை. இதற்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாகவுள்ளோம்” – என்றார்.