சத்துணவில் அழுகிய முட்டை.. உணவில் துர்நாற்றம் வீசுவதாக புகார் – அதிகாரிகளிடம் வாக்குவாதம்..
பென்னாகரம் அருகே பெரும்பாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் சத்துணவில் மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டைகள் தரமற்ற முறையில் இருப்பதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த பெரும்பாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 800-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பள்ளியில் மதிய உணவில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முட்டை தரமற்ற முறையிலும் அழுகிய நிலையில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் அழுகிய துர்நாற்றத்துடன் இருந்துள்ளது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் தனது பெற்றோர்களிடம் தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து வந்த பெற்றோர்கள் சத்துணவு மையத்தை முற்றுகையிட்டு சத்துணவு அமைப்பாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த காவல் துறையினர் மற்றும் பிடிஒ அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் மாணவர்களுடைய பெற்றோர்கள் மதிய உணவில் தரமான உணவு வழங்கப்படுவதில்லை. இதேபோல் மதிய உணவில் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பள்ளியில் மதிய உணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு பேதி , மயக்கம் காய்ச்சல் என பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் சத்துணவு அமைப்பாளரை பணி நீக்கம் செய்ய வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் அப்படி இல்லை எனில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.
மேலும் இதே நிலை நீடித்தால் மாணவர்களுடைய மாற்றுச் சான்றிதழை வாங்கி வேறு பள்ளியில் சேர்ப்பதுதான் வழி என்று பெற்றோர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்..