அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டை முற்றுகையிட்டு திமுக மகளிர் அணியினர் போராட்டம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு வெள்ளிகிழமையுடன் (இன்றுடன்) நிறைவடைகின்றது. திமுக கூட்டணி, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு மனுதாக்கல் செய்து வருகின்றனர்.
பெரும்பாலான வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து முடித்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில், கோவை மாநகராட்சி வார்டு கவுன்சிலர்கள் பதவிக்கு மகளிர் அணியினருக்கு உரிய வாய்ப்பு வழங்கப்பட வில்லை எனவும், திமுக நிர்வாகிகளின் மனைவி மற்றும் மகள்களுக்கு சீட்டை ஒதுக்கி இருப்பதாக கூறி திமுக மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் , மகளிர் அணி நிர்வாகி கல்பனா தலைமையில் கோவை பீளமேடு அருகில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீட்டை இரவு நேரத்தில் முற்றுகையிட்டனர்.
அப்போது திமுகவில் 50 சதவிகித இடங்கள் மகளிருக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் மகளிர் அணியில் இருந்து கட்சிக்காக உழைத்தவர்களுக்கு சீட் ஒதுக்கப்பட வில்லை என குற்றம் சாட்டினர். இந்த விவகாரத்தை கட்சித் தலைமைக்கு எடுத்துச் செல்லவே அமைச்சரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், கட்சியில் பல ஆண்டுகளாக உழைத்த மகளிருக்கு உரிய வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
செந்தில் பாலாஜி வீட்டில் இல்லாத நிலையிலும் வீட்டின் முன்பாக கூடிய மகளிர் அணியினர் முற்றுகையில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர்.