‘ஹபாயா’ சர்ச்சை: இனப்பிரச்சினைக்கு வழிவகுக்கக்கூடாது! – சம்பந்தன் வலியுறுத்து.

‘ஹபாயா’ சர்ச்சை: இனப்பிரச்சினைக்கு வழிவகுக்கக்கூடாது! – சம்பந்தன் வலியுறுத்து

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் மீண்டும் எழுந்துள்ள ‘ஹபாயா’ சர்ச்சையால் அதிருப்தியடைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், இது இனப்பிரச்சினைக்கு வழிவகுக்கக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்பேசும் மக்கள் என்ற ரீதியில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டியது அத்தியாவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, ஒவ்வொரு இனத்தினுடைய உரிமைகளையும் மற்றைய இனம் மதிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

‘ஹபாயா’ அணிந்து வந்திருந்த குறித்த முஸ்லிம் பெண் ஆசிரியர் உண்மையில் அதிபர் மீது தாக்குதல் நடத்தியிருந்தால் அது தவறான விடயம் எனவும், இந்தக் கருமத்தை நாம் சமாதானமாகத் தீர்க்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஒருவரையொருவர் மதித்து மற்றவர்களுடைய கருமத்துக்கு – சுயமரியாதைக்கு – இறைமைகளுக்குப் பாதகம் இல்லாமல் நாம் செயற்பட வேண்டும்.

அனைவரும் இந்தக் கடமையை ஒற்றுமையாகச் செய்ய வேண்டும் என நான் மிகத் தயவாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

பிரச்சினையை நாம் வளர்க்கக்கூடாது. தமிழ்பேசும் மக்கள் என்ற வகையில் வடக்கு – கிழக்கு என்பது எமது சரித்திர ரீதியான வதிவிடம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டு அந்த அடிப்படையில் இறைமையை நாம் பாதுகாப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும்” – என்றார்.
…….

Leave A Reply

Your email address will not be published.