மஞ்சப்பை முழுவதும் சில்லறை காசு; பிரதமர் திட்டத்தை விமர்சித்து வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இறுதி நாளான இன்று சுயேட்சைகள், அரசியல் கட்சியினர் என அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் வந்து தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த வகையில் தேனியில் வேட்பு மனுத்தாக்கலுக்கான கட்டணத்தை சில்லறை காசுகளாக செலுத்திய திமுக பெண் வேட்பாளர் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட 30வது வார்டில் திமுக சார்பில் ரம்யா ஆனந்த் என்ற பெண் வேட்பாளர் போட்டியிடுகிறார். இதற்காக இன்று தனது வேட்புமனுவை கம்பம் நகராட்சி தேர்தல் அலுவலரிடம் வழங்கினார். அப்போது விண்ணப்ப கட்டணமான ரூபாய் இரண்டாயிரத்தை சில்லறை காசுகளாக செலுத்தினார்.
இது குறித்து அவர் கூறுகையில், முதலமைச்சர் ஸ்டாலின் கூறிய மஞ்சப்பை கலச்சாரத்தை பின்பற்ற வேண்டும் என்பதற்காக இன்று தனது வேட்பு மனு தாக்கலுக்கு இரண்டு மஞ்சள் பைகளுடன் வந்ததாகவும், அதில் ஒரு பையில் ஆவணங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் எடுத்து வந்ததாக தெரிவித்தார்.
மற்றொரு மஞ்சள் பையில், பிரதமர் மோடியின் தவறான பொருளாதார கொள்கையான பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் கைகளில் சில்லறை காசுகள் இருப்பதை குறிப்பதற்காக தனது வேட்பு மனுத் தாக்கலுக்கான கட்டணத்தை சில்லறை காசுகளாக எடுத்து வந்ததாக தெரிவித்தார்.