மீண்டும் ஆளுநருக்கு நீட் விலக்கு மசோதாவை அனுப்ப முடிவு…சிறப்பு சட்டமன்ற கூட்டம் கூடுகிறது
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்க ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சட்டமுன்வடிவு 13-9-2021 அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றிட, மத்திய அரசிற்கு அனுப்பி வைப்பதற்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த இந்த மசோதாவை ஆளுநர் பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதனையடுத்து, அந்தச் சட்டமுன்வடிவை தமிழ்நாடு சட்டமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஆளுநர் 1-2-2022 அன்று சட்டமன்றப் பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பி வைத்தார். மேலும், நீட் விலக்கு கோரும் இந்தச் சட்டமுன்வடிவானது, கிராமப்புற ஏழை மாணவர்களின் நலனுக்கு எதிரானதாக இருப்பதாகவும் ஆளுநர் தெரிவித்திருந்தார்.
ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள்,மதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி,கொங்குநாடு கட்சி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. பாஜக, அதிமுக கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே முடிவாக அமையும் என்ற அடிப்படையில் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி, ஆளுநர் கூறிய கருத்துகள் தொடர்பாக தெளிவாக விவாதித்து, சரியான வாதங்களை முன்வைத்து சட்டமுன் வடிவை மீண்டும் நிறைவேற்றி குடியரசுத் தலைவின் ஒப்புதலை பெற மீண்டும் அனுப்பி வைப்பது என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஒரு மன்றம் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியதாக வரலாறு இல்லை. முதன்முறையாக நடைபெற்றிருக்கிறது. இதற்கான சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட இருக்கிறது என்று கூறினார்.