பகிடிவதையை ஒருபோதும் இங்கு அனுமதிக்க முடியாது.
‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அது முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திகவின் மகனுக்கும் பொருந்தும் என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ராகம மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோவின் மகனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமலிருப்பதற்கான காரணங்கள் எதுவும் இல்லை எனக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதியிடமிருந்து மக்கள் எதிர்பார்க்கும் ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றது எனவும் கூறினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அருந்திக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். ஏதோ நடந்துள்ளது. அவருடைய மகன் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆகவே, நாங்கள் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்.
சட்டத்தை மறைக்க வேண்டிய அவசியமில்லை. இராஜாங்க அமைச்சரின் மகனாக இருந்தாலும் சரி, சாதாரண பிரஜையின் மகனாகயிருந்தாலும் சரி அவருக்கு எதிராக ஒரே நாடு ஒரே சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் இதனையே ஜனாதிபதியிடமிருந்து எதிர்பார்க்கின்றனர். தவறு செய்திருந்தால் அவர் தண்டிக்கப்படுவார்.
அப்பாவி என்றால் நீதிமன்றில் அவர் தன்னை நிரூபிப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும். இந்தச் சம்பவத்துக்குப் பகிடிவதையே காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பகிடிவதைக்கு எதிராகக் கடும் நடவடிக்கையை எடுக்கவேண்டும். எங்களால் ஒருபோதும் பகிடிவதையை அனுமதிக்க முடியாது” – என்றார்.