இருப்பதை இழக்காமல் முன்னோக்கி நகர்வோம்! – மனோ எம்.பி. தெரிவிப்பு.

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நாம் முழுமையான தீர்வாக ஏற்கவில்லை. அதனை வைத்துக்கொண்டு முன்னோக்கி நகரவேண்டும். மாறாக இருப்பதையும் இழக்கும் விதத்தில் செயற்படக்கூடாது.”
– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியவற்றின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
நாவலப்பிட்டிப் பகுதியில் இன்று இடம்பெற்ற ஆன்மீக நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் மனோ கணேசன் எம்.பி. மேலும் தெரிவித்ததாவது:-
“இந்த நாட்டிலே விடயம் புரியாத நபர்கள் பலர் தெற்கிலும் உள்ளனர். வடக்கிலும் வாழ்கின்றனர். தெற்கில் உள்ள நபர்களில் ஜனாதிபதி முதன்மையானவர். அவரின் சுதந்திர தின உரையை செவிமடுக்கையில் சிரிப்புத்தான் வந்தது. வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு, முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றார். ஆனால், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் வேறு நாடுகளுக்குச்சென்றுவிட்டனர். புலம்பெயர் தமிழர்களிடம் பணம் உள்ளது. கோட்டா ஆட்சியில் அவர்கள் இங்கு வருவார்களா? வரமாட்டார்கள்.
எனவே, சஜித் தலைமையில் அமையும் ஆட்சியில் நாம் நிச்சயம் வெளிநாட்டு முதலீடுகளை உள்ளீர்ப்போம்.
இலங்கை பல்லின மக்கள் வாழும் நாடு. அனைவரும் ஒன்றிணைந்தால்தான் நாடு முழுமைப்படும். அதுவரைக்கும் இந்த நாடு உருப்படாது. நாம் அனைவரும் இலங்கையர்கள். அதற்கு பிறகுதான் இனம் எல்லாம் வரும்.
13ஆவது திருத்தச் சட்டத்தை நாம் முழு தீர்வாக ஏற்கவில்லை. அதேபோல சிங்கள மக்களின் ஆசியின்றி தீர்வை பெறமுடியாது. இது எனக்கு மட்டுமல்ல அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டவர்களுக்கும் தெரியும். எனவே, இருப்பதையும் இழக்காமல், முன்னோக்கி செல்வோம் என்பதை விசயம் புரியாதவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” – என்றார்.