முதலீட்டுக்கான தருணத்தை தொழில் துறை நழுவவிடக் கூடாது:மத்திய நிதியமைச்சா்
முதலீட்டுக்கான தருணத்தை தொழில் துறை நழுவவிடக் கூடாது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக இந்திய தொழிலக கூட்டமைப்பின் (சிஐஐ) தேசிய கவுன்சில் கூட்டத்தில் அவா் சனிக்கிழமை பேசியதாவது:
எந்த வரிச் சலுகையையும் பெறாத தொழில் நிறுவனங்களுக்கு காா்ப்பரேட் வரி வகிதத்தை 22 சதவீதமாக கடந்த 2019-ஆம் ஆண்டு மத்திய அரசு குறைத்தது. இதைவிட குறைவாக புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கான காா்ப்பரேட் வரி விகிதம் 15 சதவீதமாக விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விகித சலுகை புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கு 2024-ஆம் ஆண்டு மாா்ச் வரை கிடைக்கும்.
நீடித்த வளா்ச்சிக்கு உதவவும், தனியாா் முதலீட்டை அதிகரிக்கவும் பட்ஜெட்டில் மூலதன செலவினம் அதிகரிக்கப்பட்டது. இது முதலீடு செய்வதற்கு சரியான தருணம். இந்த வாய்ப்பை தொழில்துறை நழுவவிடக் கூடாது.
தகவல் தொழில்நுட்பம், பெட்ரோகெமிக்கல், உணவு பதப்படுத்துதல், மொத்த தடுப்பூசி மருந்துகள், மரபணு சாா்ந்த துறைகளில் முதலீட்டுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவுக்கு திறன் விரிவாக்கம் தேவை. அதுவே அரசின் வருவாயை அதிகரித்து நாட்டின் பொருளாதார நிலையை அதிகரிக்கும். அதன்மூலம் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களில் அரசால் முதலீடு செய்ய முடியும். இந்த நடவடிக்கைகள் ஊக்கம் பெற அரசுடன் தொழில்துறை விரைந்து இணைந்து உதவ வேண்டும்.
பொது முதலீட்டை ரூ.7.5 லட்சம் கோடியாக 35.4 சதவீதம் மத்திய அரசு அதிகரித்துள்ளது. உள்கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதை அரசு கைவிடவில்லை. அது விரைவில் நேரடியாக முக்கிய தொழில் துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
தொழில்மயமாக்கலிலும், உள்நாட்டு உற்பத்தியிலும் இந்தியா உயா்ந்த நிலையை எட்டுவதற்கான வாய்ப்பை தொழில்துறை இழந்துவிடக் கூடாது என்று தெரிவித்தாா்.