பாஜகவின் பலத்தை தெரிந்துகொள்ளவே தனித்துப் போட்டி: அண்ணாமலை

பாஜகவின் பலத்தை தெரிந்துகொள்ளவே தனித்து போட்டியிடுவதாகவும் பாஜகவின் சாதனைகளை சொல்லி வேட்பாளர்கள் வாக்கு கேட்பார்கள் எனவும் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தமிழகத்தின் அனைத்து வீடுகளுக்கும் தாமரையை எடுத்து செல்வதே இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.

கோவை வடவள்ளி பகுதியில் பாஜக சார்பில் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஆங்கிலேயர் எப்போது செல்வார்கள் என்று சிந்தித்ததை போல் திமுக ஆட்சி எப்போதும் போகும் என மக்கள் காத்திருப்பதாகவும், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கோவையில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது எனவும் கோவை மாவட்டம் திமுகவிற்கு மாற்றான் தோட்டத்து மல்லிகை என்றாலும் அது மணக்காது எனவும் அவர் விமர்சித்தார்.

அமைச்சர் செந்தில்பாலாஜியை குறிப்பிட்டு கரூரிலிருந்து ஒரு டூரிஸ்ட் அமைச்சர் வந்துள்ளார் எனவும் அவர் அங்கிருந்து ஆதரவாளர்களை அழைத்து வந்து அரசியல் செய்வதாகவும், இதை கோவை மக்கள் ரசிக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தார். சுதந்திர இந்தியாவில் தேர்தல் ஆணையம் நிறுத்தி வைத்த முதல் தேர்தல் அரவக்குறிச்சி தேர்தல் என விமர்சித்த அவர், மக்களின் ஆதரவு எப்போதும் பாஜகவிற்கு இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.

மக்களுக்கும் வாக்குபெட்டிக்கும் இணைப்பு பாலமாக பாஜக வேட்பாளர்கள் இருக்க வேண்டும் என தெரிவித்த அண்ணாமலை, பாஜக பலத்தை தெரிந்து கொள்ளவே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறோம். இந்த தேர்தல் சமூக வலைதள தேர்தலாக மாறியுள்ளது. ஸ்மார்ட் வொர்க் மூலமாக மொபலை பயன்படுத்தி, சமூக வலைதளங்களில் பிரச்சாரம் தொடர்பான காட்சிகள் மற்றும் படக்காட்சிகளை அதிகம் பகிர்ந்து பிரச்சாரம் செய்ய வேண்டும் எனவும் அவர் கட்சி வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிரச்சாரத்தை சுட்டிக்காட்டிய அவர் நேற்றிலிருந்து திமுக பொய் சொல்ல துவங்கிவிட்டதாகவும் பாஜகவை எதிர்த்து தான் அரசியல் செய்ய வேண்டும் என முதல்வர் முடிவு செய்து விட்டார் எனவும் குறிப்பிட்டார். நீட் பாஜக திணித்தது என முதலமைச்சர் கூறுகிறார்; ஆனால் காங்கிரஸ் காலத்தில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட மருத்துவ இடங்களை காட்டிலும் கடந்த 7 ஆண்டுகளில் இரட்டிப்பு மடங்கு கூடுதலாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், நீட் தேர்வு காரணமாக அதிக கட்டணம் வசூலிக்க முடியாமல் தமிழகத்தில் அதிக மருத்துவ கல்லூரிகளை இயக்கி வரும் திமுகவினர் தான் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் விமர்சித்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ஒரு பக்கம் திமுக தனது அதிகாரத்தை காட்டுகிறது எனவும், ஒருபக்கம் பாஜக மோடியின் சாதனைகளை சொல்லி வெற்றிபெற உழைக்கிறோம் எனவும் தெரிவித்தார். 517 வாக்குறுதியில் 10 வாக்குறுதியை கூட திமுக நிறைவேற்றவில்லை. கர்நாடகாவில் மதப்பிரச்னையை உருவாக்கியதே காங்கிரஸ் தான். இந்து என்பது மதமே கிடையாது, அது ஒரு வாழ்வியல் முறை. மதம் என்ற வார்த்தையை பயன்படுத்துபவர்கள் புரிதல் இல்லாதவர்கள் என விமர்சித்தார்.

Leave A Reply

Your email address will not be published.