கொரோனாவுக்கு பின் சர்வதேச தலைமையை இந்தியா ஏற்கும் சூழல் உருவாகி உள்ளது – பிரதமர் மோடி
கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு பின்னர் உலக நாடுகளின் வரிசை மாறியுள்ளதாகவும், பிற நாடுகள் இந்தியாவை உற்று நோக்குவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். சர்வதேச தலைமையை இந்தியா ஏற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பட்ஜெட் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திரமோடி இன்று நாடாளுமன்றத்தில் உரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், “கொரோனாவுக்கு பின்னர் நாம் ஒரு புதிய உலக வரிசையில் வாழ்கிறோம். தொற்றுநோய்க்குப் பிறகு ஒரு புதிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. இந்தியர்கள் தலைவர்களாக அங்கீகரிக்கப்படுகிறார்கள். சர்வதேச தலைமையை இந்தியா ஏற்க வேண்டும். இதில், நம்மை குறைந்து மதிப்பிடக்கூடாது” என்று பேசினார்.
கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியிலும் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து உலக நாடுகள் கவனம் செலுத்தின என்றும் மோடி தெரிவித்தார். கொரோனா முதல் அலையின்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தி தொற்று பரவல் அதிகரிக்க காங்கிரஸ் தான் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
“நாங்கள் ஜனநாயகத்தில் உறுதியான நம்பிக்கை கொண்டவர்கள், விமர்சனம் என்பது ஜனநாயகத்தின் இன்றியமையாத அங்கம் என்றும் நாங்கள் நம்புகிறோம், ஆனால், எல்லாவற்றிற்கும் கண்மூடித்தனமான எதிர்ப்பை முன்வைக்க முடியாது. கொரோனா விவகாரத்தில் காங்கிரஸ் அனைத்து வரம்புகளையும் மீறுகிறது. முதல் அலையின்போது காங்கிரஸ் தொண்டர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு டிக்கெட் விநியோகம் செய்தனர். இதன் மூலம் உ.பி., உத்தரகண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கொரோனாவை அதிகரிக்க காங்கிரஸ் முயற்சித்தது” என்று அவர் விமர்சித்தார்.
மேக் இன் இந்தியா திட்டம் தோல்வி அடையும் என்று எதிர்க்கட்சிகள் எண்ணினர். ஆனால் இந்தியாவின் இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர் அதை வெற்றிகரமாக செய்திருக்கிறார்கள். இதனால் எதிர்க்கட்சிகள் நகைச்சுவையாக மாறிவிட்டனர். மேக் இன் இந்தியாவின் வெற்றி உங்களுக்கு வேதனை அளிக்கிறது, என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. மேக் இன் இந்தியா என்றால் கமிஷன்கள் ஒழியும், ஊழல் ஒழியும், கஜானாவை நிரப்புவதும் ஒழியும். அதனால்தான் அது அவர்களுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது எனவும் மோடி தெரிவித்தார்.