அம்பத்தூரில் ஒன்றரை வயது குழந்தை மாயம்.. போலீஸார் தீவிர விசாரணை
அம்பத்தூரில் ரயில்வே குடியிருப்பு கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த வடமாநிலத்தைச் தம்பதியரின் ஒன்றரை வயது குழந்தை மாயமானதையடுத்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.
அம்பத்தூர், காந்திநகர், தாலுகா அலுவலகம் பின்புறம் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இங்கு வடமாநிலத்தை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வருகின்றனர். இவர்களில், ஒரிசா மாநிலத்தைச் சார்ந்த கிஷோர் (38) என்பவர், மனைவி புத்தினி (22) மற்றும் ஆகாஷ் (8), பிரகாஷ் (6) துர்கி (5) லாக்டவுன் (ஒன்றரை) ஆகிய 4 குழந்தைகளுடன் தங்கி வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் கிஷோர் தங்கியிருந்த குடிசை வீட்டில் லாக்டவுன் குழந்தை தூங்கி கொண்டிருந்தது. பின்னர், அந்த குழந்தை திடீரென்று காணவில்லை. இதன் பிறகு, கிஷோர் கட்டிட பொறியாளர் முருகானந்தத்திற்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து, அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். இதன் பிறகு, கிஷோர், முருகானந்தம் ஆகியோர் குடியிருப்பை சுற்றி தேடி பார்த்தார். இருந்த போதிலும் குழந்தையை பற்றி எவ்வித தகவலும் இல்லை.
இதுகுறித்து கிஷோர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், போலீசார் குழந்தையை யாராவது கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். மேலும், போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலமாக ஆராய்ந்து குழந்தையை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். ஒன்றரை வயது குழந்தை மாயமான சம்பவம் அம்பத்தூரில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.