கடம்பூர் பேரூராட்சியில் தேர்தல் ரத்து – தேர்தல் அலுவலர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது – மாநில தேர்தல் ஆணையம் அதிரடி..
தேர்தல் அலுவலர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாததன் காரணமாக, தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் தேர்தலை ரத்து செய்வதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சிக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், தூத்துக்குடி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, 12 வார்டுகளை கொண்ட கடம்பூர் பேரூராட்சியில், 1, 2 மற்றும் 11வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 3 சுயேச்சைகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் நேற்று நிறைவடைந்ததால், மீதமுள்ள 9 வார்டுகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து அதிகாரிகள் அறிவிப்பு பலகையில் நோட்டீஸ் ஒட்ட முயன்றனர். ஆனால், போட்டியின்றி வெற்றி பெற்ற தங்களுக்கான சான்றிதழ்களை வழங்கவில்லை எனக் கூறி, 3 சுயேச்சை வேட்பாளர்களும் தங்களது ஆதரவாளர்களுடன் பேரூராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, தேர்தல் அதிகாரியை கண்டித்து முழக்கங்களை எழுப்பியதோடு, ஒரு சிலர் தீக்குளிக்கவும் முயன்றனர். சமாதனப்படுத்த முயன்ற போலீசாருடன், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். 7 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் தொடர்ந்ததால், கடம்பூர் பேரூராட்சியின் 12 வார்டுகளுக்கான தேர்தலையும் ரத்து செய்வதாக, மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.