நீட் விலக்கு – புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று கூடுகிறது சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்..
நீட் தேர்வுக்கு எதிராக மீண்டும் மசோதா நிறைவேற்றும் வகையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று சிறப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி, கடந்த 2021 செப்டம்பர் 13-ம் தேதி ஏகமனதாக சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டது. இதை, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்காக தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், 142 நாட்களுக்குப் பின் கடந்த ஒன்றாம் தேதி, ஆளுநரின் தனிச் செயலர் மூலம் நீட் விலக்கு மசோதா, தனக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
மேலும், சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்டி, நீட் விலக்கு சட்டமுன்வடிவு குறித்து மீண்டும் விவாதித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று கூட்டப்படும் என சாபாநாயகர் அறிவித்தார். இதை தொடர்ந்து, புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று காலை 10 மணிக்கு சிறப்புக் கூட்டம் நடைபெறுகிறது.
மேலும், மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின், கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் கருணாநிதியின் படத் திறப்பு விழா ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்றது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக கலைவாணர் அரங்கிலேயே சட்டப்பேரவை நிகழ்வுகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், நீட் விலக்கு பெறும் சட்டமுன்வடிவு தொடர்பாக மீண்டும் ஆலோசிப்பதற்காக ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.