இவ்வருடம் 12 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருவார்கள்! – அரசு நம்பிக்கை.
இலங்கை சுற்றுலாப் பயணத்தை மேற்கொள்வதற்குப் பாதுகாப்பான நாடாகும் என்று பல நாடுகளால் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதனால் இந்த வருடத்தில் 12 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் வைத்தியர் ரமேஷ் பத்திரண ஊடகங்களிடம் தெரிவித்தார்.
எதிர்பார்த்த அளவில் சுற்றுலாப் பயணிகளின் வருகை இடம்பெற்று வருகின்றது எனவும் அவர் கூறினார்.
இதற்காக விசேட பிரச்சார நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இலங்கை மக்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் சுகாதார வழிகாட்டிகளை உரிய முறையில் கடைப்பிடித்து வாழ்ந்து வருகின்றனர் என்று வெளிநாட்டவர்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனாத் தொற்று நிலைமை மாறும் பட்சத்தில் மேலும் பல சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருவார்கள் எனவும் அமைச்சரவை இணைப்பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் பேச்சு குறித்து அமைச்சர் ரமேஷ் பத்திரண பதிலளிக்கையில்,
“இவ்வாறான சர்வதேச நிறுவனங்களுடனான பேச்சுகளுக்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, ஜப்பான், சீனா, இந்தியா நாடுகளுடன் தற்போதைய டொலர் நெருக்கடி குறித்து பேச்சு நடத்தப்படுகின்றது. எவ்வாறாயினும். 6.9 பில்லியன் கடனைத் திருப்பிச் செலுத்த அரசு உறுதியுடன் செயற்பட்டு வருகின்றது” – என்றார்.
கொரோனா வைரஸ் தடுப்பூசி தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், எதிர்காலத்தில் நோயை முற்றாக கட்டுப்படுத்திக்கொள்ள 3 ஆவது தடுப்பூசியை அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
உலக நாடுகளில் ஒமிக்ரோன் வைரஸ் பரவி வருகின்றது. இதனால் தொற்றின் காரணமாக ஏற்படக்கூடிய சிக்கல் நிலையைத் தடுப்பதற்கு 2 தடுப்பூசிகளையும் பெற்றுகொள்வதுடன் 3 ஆவது தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கும் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என்றும் பொதுமக்களை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.