இலங்கைக்குள் அத்துமீறி மீன்பிடிப்பதை உடன் நிறுத்துக! டக்ளஸ் வேண்டுகோள்.
“தமிழகத்துடனான தொப்புள் கொடி உறவைப் பலப்படுத்த விரும்புகின்ற அதேவேளை, இலங்கைக் கடற்பரப்பில் இழுவைமடி வலைத் தொழிலில் ஈடுபடுவதை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கின்றோம்.”
இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்தார் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.
இந்தியக் கடற்றொழிலாளர் பிரதிநிதிகளுடன் இன்று (07) நடத்திய காணொளி மூலமான கலந்துரையாடலிலேயே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
தமிழகத்தில் அமைந்துள்ள இந்தியாவுக்கான இலங்கையின் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்த கடற்றொழிலாளர் பிரதிநிதிகள், தொப்புள் கொடி உறவுகளான தங்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு மாற்றுத் தொழில் முறையில் ஈடுபடும் வரைக்குமான கால அவகாசத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படடது.
மேலும், கைப்பற்றப்பட்டுள்ள தங்களின் மீன்பிடிப் படகுகளை ஏலத்தில் விற்பனை செய்கின்ற செயற்பாடுகளையும் மீள்பரிசீலனை செய்யுமாறும் இந்தியக் கடற்றொழிலாளர் பிரதிநிதிகளால் கோரப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பண்பாட்டு, கலாசார ரீதியாகவும், பல்வேறு தேவைகள் காரணமாகவும் தமிழக உறவுகளுடனான தொப்புள் கொடி உறவு வலுப்படுத்த வேண்டும் என்பதை உளமாரத் தான் எதிர்பார்ப்பதாகவும், அதற்காக இலங்கையின் கடல் வளம் அழிந்து போவதை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
அதேபோன்று, பயன்படுத்த முடியாதவை என்ற அடிப்படையில் இந்தியக் கடற்றொழிலாளர்களால் கைவிடப்பட்ட மீன்பிடிப் படகுகளே இலங்கையில் ஏலமிடப்படுகின்றன எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.
மேலும், பேச்சுகளை நடத்தி ஒரு சுமுகமான தீர்வைக் காண்பதற்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், பேச்சு மூலம் சுமுகமான தீர்வை எட்டுவது ஒருபுறமிருக்க, இலங்கைக் கடற்பரப்பினுள் நுழைந்து சட்டவிரோத தொழிலில் ஈடுபடுவதை இந்தியக் கடற்றொழிலாளர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இன்றைய காணொளி மூலமான கலந்துரயாடலில், நாகைப்பட்டினம், இராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழகத்தின் தென் மாவட்ட கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.