கேரள மலைப் பகுதியில் சிக்கிய இளைஞர் மீட்பு
கேரள மலைப் பகுதியில் மூன்று நாள்களாக சிக்கித் தவித்த இளைஞர் ராணுவத்தின் உதவியுடன் மீட்கப்பட்டார்.
பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புலா மலைப் பகுதிக்கு திங்கள்கிழமை பாபு(வயது 23) உள்ளிட்ட மூன்று இளைஞர்கள் டிரக்கிங் சென்றுள்ளனர். அப்போது பாபு என்ற இளைஞர் கால் தவறி செங்குத்தான மலை இடுக்கில் விழுந்துள்ளார்.
தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை மற்றும் மீட்புப் படையினரால் இளைஞரை மீட்க முடியவில்லை. தொடர்ந்து கடலோர காவல் படையின் ஹெலிகாப்டர் மூலம் முயற்சி செய்தும் மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து வெலிங்டனிலிருந்து மலையேற பயிற்சி பெற்ற ராணுவக் குழுவும் பெங்களூருவிலிருந்து பாராசூட் மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து இன்று காலை 5 மணிமுதல் மீட்புப் பணிகளை தொடங்கினர்.
இந்நிலையில், மூன்று நாள்களாக உணவு, குடிநீர் இல்லாமல் தவித்த இளைஞரை புதன்கிழமை காலை 10 மணியளவில் ராணுவ உதவியுடன் மீட்கப்பட்டார்.
தொடர்ந்து, முதலுதவி அளிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார்.