மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு ஆதரவு – இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்
இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவதற்கும், கிறிஸ்தவர்கள் சிலுவை அணிவதற்கும் இந்து மக்கள் கட்சி ஆதரவு தெரிவிப்பதாகவும் காவிக் கொடி ஆளும் இடங்களில் முஸ்லீம்களுக்கு பாதுகாப்பு இருக்கும் என்றும் அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் பாஜகவுக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. சென்னையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து தான் பள்ளிக்கு வருவேன் என்று கூறுகிறார்கள். இதனை நாங்கள் ஆதரிக்கிறோம். அவர்களின் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம்.
இந்தியாவில் புர்கா அணிய தடை இல்லை. இந்துக்கள் யாரும் அதனை எதிர்க்கவில்லை. நாங்கள் காவி அணிவதை அவர்கள் மதிப்பதை போல், கிறிஸ்துவர்கள் சிலுவை அணிவதை நாங்கள் மதிக்கிறோம். அதேவேளையில், சீருடைக்குதான் நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம். படிக்கும் இடத்தில் அனைவரும் சமம். அல்லாஹு அக்பர் என்று மாணவி கோஷம் எழுப்பிய படங்களை பார்த்தேன். அந்த மாணவிக்கு பாராட்டுக்கள். காவி துண்டு அணிந்த ஒரு மாணவர் கூட அப்பெண்ணை சீண்டவில்லை. ஏனென்றால் காவித்துண்டு ஹிஜாப்புக்கு பாதுகாப்பு கொடுக்கும்.
காவிக் கொடி ஆளும் இடங்களில் முஸ்லீம்களுக்கு பாதுகாப்பு இருக்கும். தி.க., கம்யூனிஸ்ட் இருக்கும் இடங்களில் தான் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. விரும்பி மதம் மாறி சென்றவர்களுக்கும், மதம் மாறப்போகிறேன் என்று சொன்னவர்களுக்கும் நாங்கள் ஆதரவு. ஏமாற்றி, மோசடி பண்ணி மதம் மாற்றுவதைதான் நாங்கள் எதிர்க்கிறோம்’ என்று தெரிவித்தார்.