உரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் விவசாயின் வருமானம் 100% மாக அதிகரிக்கப்படும்..- ஜனாதிபதி
நாட்டை ஆட்சி செய்த குழுக்கள் மீண்டும் ஒன்றிணைந்து மக்களை தவறாக வழிநடத்தி நாட்டை பாதாளத்திற்கு இழுத்துச் செல்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சவால்கள் இருந்தபோதிலும், “சுபீட்சத்தின் பார்வை” கொள்கையின் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதியளித்தபடி விவசாய சமூகத்தின் வருமானத்தை நூறு வீதத்தால் அதிகரிப்பதற்கும் நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்கும் தான் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்திருந்த முதலாவது மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அனுராதபுரம் சல்கடுவ மைதானத்தில் நேற்று (09) பிற்பகல் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ‘சுபீட்சத்தின் தரிசனம்’ கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக சவால்களுக்கு முகங்கொடுத்து அரசாங்கம் அடைந்துள்ள இலக்குகள் குறித்து பொதுமக்களை தெளிவுபடுத்தும் வகையில் பொதுக்கூட்டம் தொடரை ஏற்பாடு செய்து வருகின்றது.
ஜனாதிபதி ராஜபக்ஷ மற்றும் பிரதமர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ, அனுராதபுரம் மாவட்ட தலைவர் எஸ்.எம். சந்திரசேன உட்பட அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் ஒன்றிணைந்து செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அரசின் கொள்கை எதிர்கால சந்ததியினரின் நலனை நோக்கமாகக் கொண்டது. எனவே, எத்தகைய தடைகள் வந்தாலும் தாம் தொடர்ந்து முன்னோக்கிச் செல்வதாக ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அரசைக் கண்டித்து வீதியில் இறங்கிப் போராடுபவர்கள் அரசாங்கத்தைப் பார்க்காமல் மக்களைப் பார்க்க வேண்டும். நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை செய்ய அரசு ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும். வளர்ந்து வரும் பொருளாதாரத்தை பாதுகாக்க நாட்டை மூடாமல் அரச கொள்கைகளை நடைமுறைப்படுத்த அனுமதிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.
இந்நிகழ்வில் மகாசங்க உறுப்பினர்கள், அமைச்சரவை அமைச்சர்கள், வடமத்திய மாகாண ஆளுநர், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சர்கள், மாநகர சபைகள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
– ஜனாதிபதி ஊடகப் பிரிவு