எந்தத் தேர்தல் நடந்தாலும் ராஜபக்ச அரசு மண்கவ்வும்! – சஜித் ஆரூடம்.
எந்தத் தேர்தல் நடந்தாலும் ராஜபக்ச அரசு படுதோல்வியடைவது உறுதி என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் ஏற்பட்டுள்ள சட்டச் சிக்கல் நிலை காரணமாக விரைவில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசு பரீசிலித்து வருகின்றது என வெளியாகியுள்ள செய்தி குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“எந்தத் தேர்தலையும் எந்த வேளையிலும் எதிர்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளது. ஆனால், ராஜபக்ச அரசுக்கு தேர்தலை எதிர்கொள்ளும் திராணி இல்லை. அதனால்தான் உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலத்தை ஓராண்டுக்கு இந்த அரசு நீடித்தது. இப்போது விரைவில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசு பரீசிலித்து வருகின்றது என வெளியாகியுள்ள செய்தி வேடிக்கையாகவுள்ளது.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் எந்தச் சட்டச் சிக்கலும் வராது. ஏனெனில், தேர்தலை நடத்துவதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிவிட்டு மாகாண சபைத் தேர்தலை இந்த அரசு நடத்த முடியும். தோல்விப் பயம் காரணமாகவே மாகாண சபைத் தேர்தலை நடத்த இந்த அரசு பின்னடிக்கின்றது. தேர்தல் பயம் காரணமாகவே உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலத்தையும் இந்த அரசு ஓராண்டுக்கு நீடித்தது” – என்றார்.
இதேவேளை, முடிந்தால் எதிர்க்கட்சியை இனிவரும் தேர்தலில் வென்று காட்டுமாறு சவால் விடுக்கின்றேன் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுப் பேரணிகளின் ‘முதலாவது பொதுஜன பேரணி’ நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.