சுகாதார தொழிற் சங்கங்கள் ஒன்றிணைந்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.

சம்பள பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார தொழிற் சங்கங்கள் ஒன்றிணைந்து வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

நாடாளாவிய ரீதியில் தாதியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட 16 தொழிற் சங்கங்களைச் சேர்ந்தோர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த திங்கள் கிழமை முதல் பணிபுறக்கணிப்பு மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக இன்று குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில் சுகாதார சேவையைச் சேர்ந்த 16 தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், சம்பளப் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு வேண்டும், சுகாதார நிர்வாக சேவையை நிறுவுக, உரிய காலப்பகுதியில் பதவி உயர்வு வழங்கு, சம்பள முரண்பாட்டினை நீக்கு, மருந்துகளின் விலைகளை உடனடியாக குறை’ உள்ளிட்ட பல்வேறு கோரிக்களை முன் வைத்து கோசங்களை எழுப்பியதுடன், சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்தனர்.

அத்துடன், தமது கோரிக்கைக்கு சுகாதார அமைச்சு சாதகமான பதிலை வழங்காது விடின் தமது போராட்டம் தொடரும் எனவும் இதன்போது அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.