ரஷ்யாவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக “சுதந்திர வாகன அணிவகுப்பு” போராட்டம்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கொரோனாவிற்கு எதிரான போரில் தடுப்பூசி மிக முக்கிய பங்கு வகிப்பதாக உலக சுகாதார மையம் கூறி வருகிறது. சர்வதேச பயணங்கள் மேற்கொள்வதற்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது அவசியமானதாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் ஒரு சில நாடுகளில் கொரோனா தடுப்பூசியை கட்டாயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஐரோப்பிய நாடுகளில் இந்த போராட்டங்கள் பெருமளவில் பொதுமக்களால் நடத்தப்பட்டன. தடுப்பூசி செலுத்திக் கொள்வது தங்கள் உரிமை என்றும் அதனை அரசு தங்கள் மீது கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இந்த நிலையில் கனடாவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக கனரக வாகன ஓட்டுனர்கள் இணைந்து நடத்திய ‘Freedom Convoy’ எனப்படும் ‘சுதந்திர வாகன அணிவகுப்பு போராட்டம்’ சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. கனடாவின் தலைநகரில் சுமார் 2 வாரங்களுக்கும் மேலாக இந்த போராட்டம் நீடித்தது. இதனை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டிலும் வாகன அணிவகுப்பு போராட்டம் நடைபெற்றது.
இதில் கார்கள், இருசக்கர வாகனங்கள் என பல வாகன ஓட்டிகள் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போன்று ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் அமெரிக்காவிலும் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக சுதந்திர வாகன அணிவகுப்பு போராட்டங்கள் நடைபெற்றன.
அந்த வகையில் ரஷ்யாவிலும் “சுதந்திர வாகன அணிவகுப்பு” மூலம் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. பெர்பிக்னன் பகுதியில் நூற்றுக்கணக்கான வாகனங்களுடன் குவிந்த போராட்டக்காரர்கள் கட்டாய கொரோனா தடுப்பூசி நடைமுறை மற்றும் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர். இந்த சுதந்திர வாகன அணிவகுப்பில் கார்கள், வேன்கள் மற்றும் கனரக வாகனங்கள் பல பங்கேற்றன.