தெருவாசிகளை காப்பாற்ற பாம்புடன் போராடி இறந்த நாய்!
புதுச்சேரியில் தெரு நாய் ஒன்று தனது தெருவாசிகளை காப்பற்றுவதற்காக பாம்புடன் சண்டையிட்டு தனது உயிரை மாய்த்த சம்பவம் நம்மை சோகத்தில் ஆழ்த்துகிறது.
உயிரினங்களில் நன்றி மறவாத ஒரு ஜீவன் உண்டென்றால், அது நாயாக மட்டும் தான் இருக்க முடியும். நாய்கள் பல வீடுகளில் செல்லப் பிராணியாக வளர்க்கப்படுகின்றன. பொதுவாகவே, நாய்களுக்கு நாம் அன்போடு ஒரு முறை உணவு அளித்துவிட்டால், போதும் அந்த உணவளித்த நபரை வாழ்நாள் முழுவதும் அந்த நாய் மறக்கவே மறக்காது.
மேலும், அந்த நபரை காணும் போதெல்லாம் வாலை ஆட்டி அவருக்கு நன்றி தெரிவிப்பதோடு, அவருக்கு பாதுகாப்பு அரணாகவே விளங்கும். இது வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு மட்டுமே இந்த தனிக்குணம் என்றல்ல, பொதுவாக அது தெரு நாயாக இருந்தாலும், அவை என்றும் நன்றி உணர்வுடன் தான் இருக்கும்.
அதனை உறுதிப்படுத்தும் வகையில், புதுச்சேரியில் தெரு நாய் ஒன்று தனது தெருவாசிகளை காப்பற்றுவதற்காக பாம்புடன் போராடி தனது உயிரை மாய்த்த சம்பவம் நம்மை சோகத்தில் ஆழ்த்துகிறது.
புதுச்சேரி முதலியார்பேட்டை பாரதிதாசன் நகர் 3வது குறுக்கு தெருவில் இன்று அதிகாலை 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு காணப்பட்டது.
அந்த சாலையிலிருந்து ஒரு வீட்டுக்குள் நுழைய பாம்பு முயற்சித்தது. இதனை அங்குள்ள தெருநாய் கண்டுகுரைத்து பாம்பை வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுத்தது.
அதனை மீறி அந்த நல்ல பாம்பு சீற்றத்துடன் வீட்டிற்குள் செல்ல முயன்றது. அப்போது பாம்புக்கும் – நாய்க்கும் சண்டை ஏற்பட்டது. இதில் பாம்பு நாயை கடித்தது, நாயும் பாம்பை கடித்தது.
ஒன்றையொன்று மாறி மாறி கடித்துகொண்டதில் பாம்பு, நாய் இரண்டும் சாலையில் மயங்கி விழுந்து இறந்தன.
பாம்புடன் நாய் சண்டையிட்ட போது அப்பகுதியில் பெரும் சத்தத்தை ஏற்படுத்தியது. அப்பகுதியில் நடைபயிற்சி சென்றவர்கள் இந்த காட்சியை கண்டு புகைப்படம் எடுத்தனர்.
தனக்கு உணவு அளித்த தெருவாசிகளுக்காக பாம்புடன் சண்டையிட்டு நாய் உயிரிழந்துள்ளது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.