எமது மீனவர்களின் அழிவுக்கு இலங்கைக் கடற்படையும் அரசுமே பொறுப்பு!
“சொந்த நாட்டு மீனவர்களின் பாதுகாப்பு குறித்து உத்தரவாதப்படுத்தவேண்டிய இலங்கை அரசு எந்த உத்தரவாதமோ வாக்குறுதியோ வழங்காதிருக்க, வடக்கு மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து இந்தியா நேரடியாக எமக்கு உறுதிமொழி வழங்குகின்றது. எனவே, எமது மீனவர்களின் அழிவுக்கு இலங்கை கடற்படையும் இலங்கை அரசுமே பொறுப்புக் கூற வேண்டும்.”
-இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட எம்.பியுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்த கஜேந்திரகுமார் எம்.பி. மேலும் கூறுகையில்,
“வடக்கு மாகாண மீனவர்கள் தமது நாளாந்த வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எமது கடற்பரப்பிற்கு அப்பால் உள்ள மக்கள் எமது எல்லைக்குள் வருவதுடன் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். அதுமட்டுமல்லாது எமது வடக்கு மாகாண மீனவர்களின் மீன்படி வளங்களையும் சேதப்படுத்தும் நிலைமை காணப்படுகின்றது. வடமாகாணத்தை பொறுத்தவரை 50 ஆயிரம் குடும்பங்கள் மீன்பிடி துறையுடன் நேரடியான தொடர்பில் உள்ளனர். இருநூறு ஆயிரம் தனி நபர்கள் நேரடியாக மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை 23 ஆயிரம் மீனவ குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தனி நபர்கள் நேரடியாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்றனர்.
எனினும், வடக்கு மாகாணத்தை சாராத இலங்கை மீனவர்கள் இலங்கை கடற்படை மற்றும் பாதுகாப்புப்படைகளின் அனுமதியுடன் வருவதுடன், சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதனால் எமது உள்ளூர் மீனவர்கள் அதிக துன்பங்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேபோல் தமிழ்நாடு மீனவர்கள் சட்ட விரோதமாக எமது எல்லைக்குள் வருகை தந்து மீன்பிடியில் ஈடுபடுவது குறித்தும் தொடர்ச்சியாக நாம் . மீன்பிடித்துறை அமைச்சின் குழுக்களிலும், பல சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்திலும் முறையிட்டுள்ளோம்.
வடக்கிற்கு வெளியில் உள்ள மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி செயற்பாடுகள் காரணமாக சேதமாக்கப்பட்டுள்ள எமது மீனவர்களின் சொத்துக்கள் 600 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகும். யாழ்ப்பாணத்தை எடுத்துக்கொண்டால் 250 மில்லியன் ரூபா அளவிலான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதனை அரசு கண்மூடித்தனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றது.
தமிழர்களின் காணிகளை அபகரித்து ஒரு ஆக்கிரமிப்பு படையாக இங்கே இருக்கின்ற இலங்கை கடற்படை, தமிழ் மீனவர்கள் மீதான இந்த அத்துமீறல்களை அனுமதிப்பதன் மூலம் வடக்கு கிழக்கு மீனவ சமூகத்தை மேலும் மேலும் வறுமைபடுத்தி அவர்களை இந்த பகுதியில் இருந்து தாமாகவே வெளியேறப்பண்ணும் ஒரு இனப்படுகொலை நிகழ்ச்சிநிரலாகவே நான் இதை பார்க்கிறேன்.- அரசின் இந்த பராமுகம் திட்டமிட்ட ஒரு இனப்படுகொலை நிகழ்ச்சி நிரலின் ஒரு அங்கமே .
வடக்கு மக்களின் வாக்குகளால் தான் தெரிவு செய்யப்பட்டுள்ளேன் எனக் கூறிக்கொள்ளும் கடற்றொழில் அமைச்சர் மிக கேவலமாக முதுகெலும்பு அற்றவராக, கையாலாகதவராக அரசதரப்பில் இருந்து கொண்டு தனக்கு வாக்கு போட்ட மக்களுக்கெதிராகவே செயற்படுகிறார்.
ஆகவே தான் பிரச்சினைகளின் அடிப்படைகள் குறித்து பேசவேண்டும், அதிகாரங்கள் எம்மிடம் வரவேண்டிய தேவை குறித்து பேசவேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம், மாறாக வெறுமனே ஒற்றையாட்சி எனறும் 13 ஆவது திருத்தம் என்றும் கதைத்துக்கொண்டிருப்பது , பிரச்சினையின் அடிப்படையை மடைமாற்றும் செயலே.
இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்து நாம் கொண்டுவரவிருந்த ஒத்திவைப்பு பிரேரணையை ஒத்திவைக்குமாறும் தாம் இந்த விடயம் குறித்து உடனடியாக காத்திரமான நடவடிக்கை எடுப்பதாகவும் இந்திய தூதரகம் எமக்கு அறியத்தந்திருக்கின்றது.
அதேவேளை , இந்தவிடயத்தில் உண்மையில் சொந்த நாட்டு மக்களின் பாதுகாப்பு குறித்து உத்தரவாதப்படுத்தவேண்டிய இலங்கை அரசு ஒன்றுமே செய்யாதிருக்க , வெளிநாடு ஒன்று இந்த விடயத்தில் உத்தரவாதம் தரவேண்டியிருக்கிற நிலைமை இங்கு நிலவுகின்றது” – என்றார்.