பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குக; மாற்றுக!

“இலங்கையில் 300 – 400 பேர் தற்போதும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குறித்து எவரும் பேசுவதில்லை. ஒருசிலரது வழக்குகளே எப்போதும் பிரபல்யமாகப் பேசப்பட்டுள்ளன. எனவே, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக நீக்க அல்லது முழுமையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

“இதற்கு முன்னர் ஒருபோதும் ஏற்படாத பொருளாதார நெருக்கடி நிலையொன்று இன்று நாட்டில் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நாம் கேள்வி கேட்கையில் எந்தப் பதிலும் இதுவரை அரசிடமிருந்து கிடைக்கவில்லை. அரசியல் அமைப்பின் 148 ஆம் உறுப்புரைக்கு அமைய பொது நிதி அதிகாரம் முழுமையாக நாடாளுமன்றத்துக்கே உள்ளது. எனவே, நாடாளுமன்றத்துக்கு முழுமையான தகவல்களைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். இல்லையேல் அது எமது கடமையில் இருந்து விலகுவதாகிவிடும்.

தற்போது வெளிவிவகாரத்துறை அமைச்சர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்களை முன்வைக்கும் சட்டமூலத்தை சபையில் முன்வைத்துள்ளார். இந்தச் சட்டம் 1979 ஆம் ஆண்டு தற்காலிக சட்டமாக ஆறு மாதங்களுக்கு நடைமுறைப்படுத்துவதாகக் கூறியே அரசு கொண்டுவந்ததாக பத்திரிகைகளில் வாசித்தோம். இதுவொரு தற்காலிக சட்டம் எனவும், ஆறுமாத காலத்திற்கே இது நடைமுறையில் இருக்கும் எனவும் கூறினாலும் இன்று வரை 42 ஆண்டுகளாக இந்தச் சட்டத்துடன் வாழ வேண்டியுள்ளது.

சர்வதேச சமூகத்தின் வலியுறுத்தல்களுக்கு அமையவும், புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்தியதற்கு அமையவுமே இப்போது வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் திருத்தச் சட்டமூலத்தை முன்வைத்துள்ளார். இதற்கு மறுசீரமைப்பு எனப் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் அமைச்சரை நான் யாழ்ப்பாணத்தில் சந்தித்த வேளையிலும், மறுசீரமைப்பு என்ற வார்த்தைக்குப் புதிய அர்த்தம் தேடவேண்டியுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தேன். அதனை அவர் மறுக்கவும் இல்லை.

இந்தத் திருத்தச் சட்டமூலத்தில்புதிதாக எதுவுமே மறுசீரமைக்கப்படவில்லை. இங்கு திருத்தங்கள் எனக் கூறப்பட்டுள்ள சகல விடயங்களும் ஏற்கனவே அவ்வாறே உள்ளன. 18 மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட முடியும் என்பதை 12 மாதங்களாகக் குறைக்க நடவடிக்கை எடுத்ததாகக் கூறுகின்றனர். எமக்குத் தெரிய 18 ஆண்டுகளுக்கு மேலாக சிலர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இன்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஒரு சிலரைப் பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது. கவிஞர் அஹ்னாபும் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால், இந்த விடுதலைகளும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை மற்றும் ஏனைய அமைப்புகள் மூலமாக பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டு இவர்களின் பெயர்கள் சுட்டிக்காட்டப்பட்டதன் காரணமாகவே இடம்பெற்றுள்ளன . ஆனால், மேலும் பலர் இவ்வாறு தடுப்பில் உள்ளனர். இருபது, இருபத்தைந்து, முப்பது ஆண்டுகளாக உள்ளனர். குறைந்தபட்சம் 300 – 400 பேர் இன்றைய சூழ்நிலையிலும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குறித்து எவரும் பேசுவதில்லை. ஒரு சிலரது வழக்குகளே எப்போதும் பிரபல்யமாக பேசப்பட்டுள்ளன. எனவே, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக நீக்க அல்லது முழுமையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை .

மேலும், தற்போது நீதி அமைச்சர் சில சட்டங்களைத் திருத்த நடவடிக்கை எடுத்துள்ளார். அதனை வரவேற்கின்றோம். அதேபோல் சட்ட தாமதங்கள் ஏற்படுவதில் சட்டத்தரணிகள் பக்கமும் குறைகள் உள்ளன என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அவர்கள் மட்டுமல்ல இந்தப் பொறிமுறையிலும் தவறு உள்ளது. அதனை மாற்றியமைக்க வேண்டும். நாட்டின் சட்டத்துறை, நீதி சுயாதீனமே ஜனநாயகத்தின் அத்திபாரம். இங்கேதான் சாதாரண மக்கள் தமக்கான நியாயத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். அதுமட்டுமல்ல நாட்டின் நீதிமன்ற சுயாதீனத்தில் தலையிடுவதாக இரண்டு அரசியல் தப்பும் ஒருவருக்கு ஒருவர் குற்றம் சுமத்திக்கொண்டுள்ளனர். நாங்கள் நீதிமன்ற சுயாதீனதில் தலையிடவில்லை; நீங்களே தலையிடுகின்றீர்கள் என மாறி மாறி குற்றம் சுமத்திக்கொள்கின்றார்கள். ஆனால், உண்மை என்னவென்றால் இரண்டு தரப்புமே இந்தத் தவறைச் செய்துள்ளீர்கள். இரண்டு தரப்புமே சுயாதீன நீதித்துறையில் தலையிட்டுள்ளீர்கள். இசை நாற்காலி போன்று இரண்டு தரப்பினரும் மாறி மாறி அமர்ந்து நாட்டின் சுயாதீன நீதித்துறையில் அரசியல் தலையீட்டை செய்துள்ளீர்கள் என்பதே உண்மை. ஆகவே, இரண்டு தர்பபினரும் மாறி மாறி ஒருவருக்கு ஒருவர் கூறும் குற்றச்சாட்டுக்கள் உண்மையே. இதுவே நாட்டின் இந்த நிலைமைக்குக் காரணம்.

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது. நீதித்துறையும் அதே நிலைக்கு வந்துள்ள இந்த நேரத்திலாவது நாம் அனைவரும் ஒன்றிணைந்து கட்சி பேதம் மறந்து சரியான மாற்றத்தை உருவாக்குவோம். நாம் இதனைச் செய்யாது போனால் நாட்டு மக்களே அதனைச் செய்வார்கள். இதுவே புரட்சிகளின் வரலாறுகள்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.