வவுனியா பல்கலைக்கழகத்தைத் திறந்துவைத்தார் ஜனாதிபதி!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்த வவுனியா வளாகம், ‘வவுனியா பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் தேசிய பல்கலைக்கழகமாக அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்றது.
இதன்படி, இந்நாட்டின் 17ஆவது அரச பல்கலைக்கழகமாக ‘வவுனியா பல்கலைக்கழகம்’ வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்துடன் இணைந்த பிரயோக விஞ்ஞான பீடம், வர்த்தக பீடம் மற்றும் ஆங்கில மொழிப் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய வவுனியா வளாகம், 1997ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது.
இந்த வவுனியா வளாகத்தை தேசிய பல்கலைக்கழகமாக மாற்றுமாறு, மாணவர்கள் மற்றும் பேராசியர் குழாமினால் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதனைக் கருத்தில்கொண்ட தற்போதைய அரசு, ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரம் உயர்கல்வியை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், விரிவுரை மண்டபங்கள், பீடங்களுக்கான கட்டடங்கள், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய பல்கலைக்கழகமாக ‘வவுனியா பல்கலைக்கழகம்’ அபிவிருத்தி செய்யப்பட்டது.
வவுனியா பல்கலைக்கழக விடுதி மைதானத்தில் கூடியிருந்த பிரதேசவாசிகள், நிகழ்வு இடம்பெற்ற இடத்துக்கு வருகை தந்த ஜனாதிபதியை வரவேற்றனர். அவர்களுடன் சுமூகமாகக் கலந்துரையாடிய ஜனாதிபதி, அம்மக்களின் நலனை விசாரித்தறிந்தார்.
வவுனியா வளாகத்தை தேசிய பல்கலைக்கழகமாக மாற்றும் நிகழ்வைப் பதிவு செய்யும் நோக்கில் கல்வெட்டைத் திரைநீக்கம் செய்து திறந்துவைத்த ஜனாதிபதி, பல்கலைக்கழகத் தகவல் தொழில்நுட்ப மத்திய நிலையம் மற்றும் சகவாழ்வு மையம் போன்றவற்றை மாணவர் பாவனைக்குக் கையளித்தார்.
அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், குலசிங்கம் திலீபன், புத்தசாசன அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரும் சிரேஷ்ட பேராசிரியருமான சம்பத் அமரதுங்க ஆகியோரும், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.