இஸ்லாமியப் பெண்களுக்கு பா.ஜ.க துணையாக உள்ளது – பிரதமர் மோடி
இஸ்லாமியப் பெண்களுக்கு துணையாக பாஜக அரசு உள்ளதாகவும், அதனைப் பொறுக்க முடியாத சிலர், அவர்களை தவறாக வழிநடத்துவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் நட்டா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம், சஹரான்பூரில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், முத்தலாக்கிற்கு விதிக்கப்பட்ட தடையால் இஸ்லாமிய பெண்களுக்கு நீதி கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
இஸ்லாமிய பெண்களின் முன்னேற்றத்திற்கு ஆதரவாக பாஜக உள்ளதாகவும், அதைத் தடுக்க எதிர்க்கட்சிகள் முயன்று வருவதாகவும் கூறினார். மோடி… மோடி… என இஸ்லாமிய பெண்கள் கூறுவதை ஏற்க முடியாத சிலர், ஓட்டுக்காக அவர்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாகவும் அவர் சாடினார். மின்சார வசதி செய்து தரப்படும் என வாக்குறுதி அளிப்பவர்கள்தான் உத்தரபிரதேசத்தை இவ்வளவு காலமும் இருட்டில் வைத்திருந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
உத்தராகாண்டின் ஹரித்வார் மாவட்டத்தில் பரப்புரையில் ஈடுபட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் இருப்பவர் பிரதமர் அல்ல என்றும் ஒரு மன்னர் அங்கிருப்பதாகவும் கூறினார். அந்த மன்னராட்சி மக்களுக்குத் தேவையில்லை என்றும், ஏழைகள், விவசாயிகள், சிறு வியாபாரிகள் ஆகியோருக்கான அரசே வேண்டும் என்றும் ராகுல் காந்தி கூறினார்.
பிரதமர் பேசுவதை தான் கேட்பதில்லை என்று பேட்டி ஒன்றில் பிரதமர் கூறியதை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, அது உண்மைதான் எனவும், மோடி மீதோ, அவரது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ போன்ற அமைப்புகள் மீதோ தனக்கு பயம் இல்லை எனவும் தெரிவித்தார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, உத்தரபிரதேசத்தின் ராம்பூரில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார். அங்கு பஞ்சர் ஒட்டும் கடைக்குச் சென்ற அவர், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை கடை உரிமையாளரிடம் விளக்கினார்.
உத்தர பிரதேச பரப்புரையை முடித்துவிட்டு, உத்தராகண்ட் சென்ற பிரதமர் மோடி, ஸ்ரீநகரில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். பாஜக தேசிய தலைவர் நட்டா உள்ளிட்ட பலரும் தீவிர பரப்புரை மேற்கொண்டனர்.
மணிப்பூரில் இரு கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முதல் கட்டத் தேர்தலை, பிப்ரவரி 27-ம் தேதிக்குப் பதிலாக பிப்ரவரி 28-ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுபோல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மார்ச் 3-ம் தேதிக்குப் பதிலாக மார்ச் 5-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.