வவுனியாவில் கோட்டாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்.
வவுனியா பல்கலைக்கழகத்தை திறந்து வைப்பதற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச இன்று விஜயம் செய்த நிலையில் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா, பம்பைமடுவில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்துக்கு ஜனாதிபதி சென்றிருந்த நிலையில் கறுப்புக் கொடிகளுடன் வருகை தந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பல்கலைக்கழகம் முன்பாக சென்று போராட்டத்தில் ஈடுபட முனைந்தனர்.
இதன்போது பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டதுடன், விசேட அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு பம்பைமடு சோதனைச் சாவடிப் பகுதியில் வைத்து பல்கலைக்கழப் பகுதிக்கு செல்ல முடியாதவாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பொலிஸ் தடுப்பை உடைத்து செல்ல முற்பட்டமையால் அப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.
இதன்போது, “காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி வேண்டும், போர்க்குற்றவாளியை சர்வதேச நீதிமன்றில் நிறுத்து, சர்வதேச விசாரணையே தேவை’ என அவர்கள் கோஷம் எழுப்பயதுடன், பொலிஸாருடன் கடும் தர்க்கத்திலும் ஈடுபட்டனர்.
“எமது உறவுகள் காணாமல்போகவில்லை. காணாமல் ஆக்கப்பட்டார்கள். நாங்கள் இந்த நாட்டின் பிரஜை இல்லையா? நடமாடுவதற்கான சுதந்திரம் எமக்கில்லையா? எங்களை மட்டும் எப்போதுமே எதற்காகத் தடுக்கின்றீர்கள்? நாங்கள் பயங்கரவாதிகளா? எமக்கு எப்போதுமே கம்பிவேலி பிரயோகம்தானா?” என்று பொலிஸாரைப் பார்த்து அவர்கள் கேள்வி எழுப்பினர்.
“கொலைக்குற்றவாளியே நாட்டின் ஐனாதிபதியாக இருக்கிறார். அவர்களை நம்பியே நாம் எமது பிள்ளைகளை ஒப்படைத்தோம். எனவே, ஜனாதிபதியிடம் நாம் சில கேள்விகளை கேட்கவேண்டும். அதற்கு அனுமதி வழங்குங்கள்” என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தபோதும் அதனைப் பொருட்படுத்தாத பொலிஸார் அவர்களை முன்செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் குறித்த பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது.
இதையடுத்து ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரி ஒருவர் வருகை தந்து, குறித்த போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடியதுடன், இருவரை மாத்திரம் வந்து ஜனாதிபதியைச் சந்திக்குமாறு கோரினர். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அவர்கள், நாம் அவரைச் சந்திக்க வரவில்லை. எங்கள் அனைவரையும் முன்செல்ல அனுமதிக்குமாறு கோரியதுடன், கொலைக்குற்றவாளி எப்படி நீதிபதியாக மாற முடியும் என்றனர்.
இருமணி நேரத்துக்கும் மேலாக குறித்த பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அவர்களை வழிமறித்து முன்செல்ல முடியாதவாறாக நின்றனர். இந்நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கதறி அழுது கோஷமிட்டனர். அதில் ஒருவர் மயங்கி விழுந்ததையடுத்து அவர்கள் அங்கிருந்து வெளியேறி சென்றிருந்தனர்.