3-வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீசுக்கு 266 ரன்கள் இலக்கு.
இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.
இதில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. இந்த நிலையில், இந்திய அணி ஆட்டத்தின் தொடக்கத்திலேயே முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோகித் சர்மா 13 ரன்களிலும், ஷிகர் தவன் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மூன்றாவதாக களமிறங்கிய விராட் கோலி, ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
இதையடுத்து ஸ்ரேயஸ் அய்யரும், ரிஷப் பண்ட்டும் பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். ரிஷப் பண்ட் 56 ரன்களில் ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடிய ஸ்ரேயஸ் அய்யர் 80 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் வந்த வேகத்தில் 6 ரன்னில் வெளியேறினார்.
பின்வரிசையில் வாஷிங்டன் சுந்தர் (38), மற்றும் தீபக் சாகர் (33) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தினால் இந்திய அணி நல்ல ஸ்கோரை எட்டியது. இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 265 ரன்களை குவித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடி வருகிறது.