நாளை நடைபெற இருக்கும் ஐ.பி.எல் வீரர்கள் மெகா ஏலம்.
5-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான மெகா ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நாளை, நாளை மறுநாள் ஆகிய இரு தினங்கள் நடக்கிறது. இந்த ஏலப்பட்டியலில் மொத்தம் 590 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 290 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடி, ரூ.1½ கோடி, ரூ.1 கோடி, 75 லட்சம், 50 லட்சம், 40 லட்சம், 30 லட்சம், 20 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதிகபட்ச அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு 46 வீரர்களின் பெயர் உள்ளது.
இந்த மெகா ஏலத்தில் ஸ்ரேயாஸ் அய்யர், டேவிட் வார்னர், இஷான் கிஷன், தீபக் சாஹர், ஜேசன் ஹோல்டர், யுஸ்வேந்திர சாஹல், ரபடா, தமிழகத்தை சேர்ந்த ஷாருக்கான் ஆகியோர் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்க 10 அணிகளும் மல்லுக்கட்டும்.
ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய இளம் வீரர்கள் மீதும் ஐ.பி.எல். ஏலத்தில் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
ஒவ்வொரு அணியும் இந்த சீசனில் வீரர்களின் ஏலத்துக்காக ரூ.90 கோடி வரை செலவழிக்கலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 வீரர்களை தக்க வைத்ததன் மூலம் ரூ.42 கோடியை செலவழித்து உள்ளது. இதனால் அந்த அணி எஞ்சிய தொகையான ரூ.48 கோடியை மட்டுமே ஏலத்தில் பயன்படுத்த முடியும். நாளை மதியம் 12 மணிக்கு தொடங்க இருக்கும் மெகா ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏற்கனவே அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களை சென்னை அணி ஏலத்தில் எடுக்குமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.