கொரோனாவின் ‘போர் நிறுத்தம்’ : சுவிசிலிருந்து சண் தவராஜா
இரண்டு வருட காலகட்ட நெருக்கடியின் பின்னர் இனிப்பான செய்தியொன்றை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது. வெகு விரைவில் ஐரோப்பிய மண் கொரோனப் பெருந் தொற்றின் மோசமான தாக்கத்தில் இருந்து வெளிவர உள்ளது என்ற தகவல் 2022ஆம் ஆண்டின் மிகச் சிறந்த செய்தியாக உள்ளது. கொரோனப் பெருந் தொற்றிற்கு எதிராக உலகமே போராடி வரும் நிலையில், ஒரு தற்காலிக வெற்றியாக இது பார்க்கப்படுகின்றது. இதன் அர்த்தம் கொரோனா அபாயத்தில் இருந்து உலகம் முற்றாக விடுபட்டுவிட்டது என்பதல்ல, ஆயினும் அது சரியான திசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது என்பதே.
இந்தச் செய்தி தனியே ஐரோப்பியக் கண்டத்தில் வாழும் மக்களுக்கு மாத்திரம் உவப்பான ஒன்றல்ல. மாறாக, உலக மாந்தர் அனைவருக்குமே மகிழ்வைத் தரக் கூடியதே. இன்று அவர்கள், நாளை நாங்கள் என்ற அடிப்படையில் இதனை எடுத்துக் கொள்ள முடியும்.
உலக சுகாதார நிறுவனத்தின் இந்த எதிர்வு கூறல் வெளியான தருணத்தில் ஐரோப்பிய நாடுகள் பலவும் கொரோனாக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. மீண்டும் பழைய உலகைப் பாரத்துவிட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பியப் பிராந்தியப் பணிப்பாளர் மருத்துவர் ஹான்ஸ் குளுகே, பெப்ரவரி 3ஆம் திகதி நடாத்திய ஊடகர் சந்திப்பில் ஐரோப்பாவில் கொரோனாத் தொற்றின் எதிர்காலம் தொடர்பிலான நம்பிக்கையான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அவரது தகவல்களின் பிரகாரம், ஐரோப்பாவில் தொடர்ந்தும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதும், பெருந் தொற்றுக்குச் சாதகமான காலநிலை எனக் கணிக்கப்பட்ட பனிக் காலம் முடிவுக்கு வருவதும், வெகு வேகமாகப் பரவி வருகின்ற போதிலும் ‘ஒமிக்ரோன்’ வகைத் திரிபுத் தீநுண்மி அதிக உயிர்ச் சேதங்களை விளைவிக்காத ஒன்றாக உள்ளதுவுமே காரணங்களாக உள்ளன. கடந்த வாரத்தில் ஐரோப்பாக் கண்டம் முழுவதிலும் 12 மில்லியன் பேர் கொவிட் தொற்றுக்கு ஆளாகி உள்ளதாகப் பதிவுகள் உள்ள போதிலும், அவர்களுள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டியவர்களின் வீதம் மிகக் குறைவாகவே இருந்ததாகத் தெரிவிக்கும் அவர், இந்த நிலைமையை ஒரு ‘போர் நிறுத்தம்’ என வர்ணித்தார்.
‘போர் நிறுத்தம்’ நடைமுறைக்கு வந்தாலும் கண்காணிப்புகளைத் தளர்த்தக் கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ள அவர், தடுப்பூசி வழங்கலைத் தொடர்வதுடன், தீநுண்மித் திரிபுகள் தொடர்பில் தொடர்ந்தும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அரசாங்கங்களைக் கேட்டுக் கொண்டார்.
மருத்துவர் ஹான்ஸ் குளுகேயின் அறிவித்தல் கிடைப்பதற்கு முன்னரேயே ஐரோப்பாவில் முதல் நாடாக டென்மார்க் கொரோனா விதிகளைத் தளர்த்தும் அறிவிப்பை வெளியிட்டு விட்டது. பெப்ரவரி முதலாம் திகதி அரசாங்கம் வெளியிட்ட அறிவித்தலுக்கமைய, அந்த நாட்டில் கொரோனாக் கட்டுப்பாட்டு விதிகள் யாவற்றையும் அரசாங்கம் திரும்பப் பெற்றுக் கொண்டது. முகக் கவசம் அணிதல், தனி மனித இடைவெளியைப் பேணுதல், தடுப்பூசிச் சான்றிதழைக் கோருதல் ஆகிய எவையும் அவசியமற்றவை எனத் தெரிவித்துள்ள அரசாங்கம், கேளிக்கை விடுதிகள், மதுபான விற்பனை நிலையங்கள் யாவும் முன்னரைப் போலவே நள்ளிரவு வரை திறக்கப்படலாம் என அறிவித்துள்ளது. அதேபோன்று, பொது இடங்களில் கூடுவோருக்கான எண்ணிக்கை வரையறையும் விலக்கப்பட்டுள்ளது.
இத்தனைக்கும், டென்மார்க்கில் கொரோனாப் பரவல் தொடரவே செய்கிறது. எனினும், தற்போதைய நிலையில் கொரோனா அச்சுறுத்தல் அபாயகரமானது அல்ல என்கிறது அரசாங்கம். அந்நாட்டில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட 80 விழுக்காடு மக்கள் இரண்டு தடவையும், 60 விழுக்காடு மக்கள் மூன்று தடவையும் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அயர்லாந்து, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளும் தத்தம் நாடுகளில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அடுத்தடுத்த நாட்களில் மேலும் பல நாடுகள் இந்தப் பட்டியலில் இணைந்து கொள்வதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன.
உலக சுகாதார நிறுவனத்தின் தகவல்களின் பிரகாரம் தடுப்பூசி வழங்கல் என்பது கொரோனாக் கொள்ளை நோய்த் தடுப்பின் பிரதான காரணமாக உள்ளதை அவதானிக்க முடிகின்றது.
உலகம் முழுவதும் இதுவரை 10 பில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. எண்ணிக்கை அடிப்படையில் ஆகக் கூடுதலான மக்களுக்கு தடுப்பூசி செலுத்திய நாடுகளின் வரிசையில் சீனா முதலாவது இடத்திலும், இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களிலும் உள்ளன. சீனாவில் 3 பில்லியன் மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இது மொத்த மக்கட் தொகையில் 85 விழுக்காடு ஆகும். இந்தியாவில் 1.6 பில்லியன் மக்கள் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளனர். எனினும் இது ஒட்டுமொத்த மக்கட் தொகையில் 51 விழுக்காடு மாத்திரமே. அமெரிக்காவில் 538 மில்லியன் மக்கள் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். இது மக்கட் தொகையில் 64 விழுக்காடு ஆகும்.
197 நாடுகள் அடங்கிய பட்டியலில் இரண்டு நாடுகள் மாத்திரமே இதுவரை தமது குடிமக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்கியுள்ள நாடுகளாகக் கணிக்கப்பட்டுள்ளன. ஸ்பெயின் நாட்டின் அருகேயுள்ள ஜிப்ரால்டர், நியூசிலாந்துக்கு அருகே உள்ள பிட்கன் தீவுகள் ஆகிய இந்த இரண்டு நாடுகளும் பிரித்தானியாவின் ஆளுகைக்கு உட்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. ஜிப்ரால்டரின் மக்கட் தொகை சற்றொப்ப 35,000 மாத்திரமே. பிட்கன் தீவுகளின் மக்கட் தொகை வெறும் 47 மாத்திரமே.
இந்தப் பட்டியலில் 90 விழுக்காடுக்கு மேற்பட்ட மக்களுக்கு தடுப்பூசி வழங்கிய நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம் (93), புருணை (91), போர்த்துக்கல் (90) ஆகியவை உள்ளன. மிகக் குறைந்த அளவில் தடுப்பூசியை வழங்கியுள்ள நாடுகளின் பட்டியலில் பெரும்பாலும் ஆபிரிக்க நாடுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இயற்கைச் சமநிலையை மனிதன் சீர்குலைக்க ஆரம்பித்த நாள்முதலாக, அந்தச் சீர்குலைவைச் சமன்செய்யும் நடவடிக்கையில் இயற்கையும் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. கொரோனாப் பெருந் தொற்று கூட இயற்கையின் அத்தகைய ஒரு மறுதாக்கம்தானா என்ற கேள்வியும் எழுகின்றது. தன்னைப்; புரியச் செய்வதற்கு இயற்கை பல வழிகளில் முயன்றாலும் கூட, அதனைப் புரிந்து கொள்ளும் ஆற்றலும், வேட்கையும் மனிதனிடம் இல்லாத நிலையில் கொரோனா அபாயம் தற்போது நீங்கினாலும், அடுத்த அச்சுறுத்தல் வெகு விரைவில் ஏற்படலாம் என்பதுவே அறிஞர் பெருமக்களின் கருத்தாக உள்ளது. கொரோனாப் பெருந்தொற்று உலகளாவிய அச்சுறுத்தலாக விளங்கிய போதிலும், மானுட சமூகமாக ஒன்றிணைந்து அதனை எதிர்கொள்ள மனித சமூகம் முயற்சித்திராத நிலையில் எதிர்கால அச்சுறுத்தல்களும் அவ்வாறே கையாளப்படுமா என்னும் ஐயங்களும் எழாமல் இல்லை. தற்கால நிகழ்வுகளையும், அணுகுமுறைகளையும் மனதில் நிறுத்திப் பார்க்கையில், நாளைய தலைமுறைக்கு நாம் கையளிக்கப் போகும் உலகம் சாவல்களும், அபாயங்களும் நிறைந்ததாகவே விளங்கப் போகின்றது என்பது மட்டும் நிச்சயம்.