சிறையில் சொகுசு வசதி குற்றச்சாட்டு: சசிகலா, இளவரசி நேரில் ஆஜராக உத்தரவு
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் நான்காண்டு சிறை தண்டனை அனுபவித்த போது, சிறையில் சொகுசு வசதிக்காக லஞ்சம் கொடுத்த வழக்கில் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் வரும் மார்ச் 11ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று பெங்களூரு 24வது ஏசிஎம்எம் நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017 பிப்ரவரி 15ம் தேதி சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளிகளாக உறுதி செய்யப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் வி.என்.சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே தண்டனை காலத்தில் சிறையில் இருந்தபோது, சொகுசு வசதிகள் செய்து கொடுப்பதற்காக சிறைத்துறை அதிகாரிகளுக்கு இரண்டு கோடி லஞ்சம் கொடுத்ததாக சசிகலா, இளவரசி மீது புகார் எழுந்தது.
இது தொடர்பாக ஊழல் தடுப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் காலம் தாழ்த்தப்பட்ட காரணத்தினால் சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் கீதா என்பவர் கடந்தாண்டு ஜூலை மாதம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், சிறை அதிகாரிகளுக்கு சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் லஞ்சம் கொடுத்த புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால், சிபிஐக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார்.
இந்த மனு மீது தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வு தொடர் விசாரணை நடத்தி அரசு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர். அதற்கு பதிலளித்த அரசு தரப்பு, இப்புகார் தொடர்பாக பெங்களூரு 24வது ஏசிஎம்எம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதுடன், குற்றத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.
இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சிறைத்துறை அதிகாரிகள் கிருஷ்ணகுமார், 2வது குற்றவாளியாக டாக்டர் அனிதா, 3வது குற்றவாளியாக சுரேஷ், 4வது குற்றவாளியாக கஜராஜ் மாகனூர், 5வது மற்றும் 6வது குற்றவாளிகளாக தண்டனை கைதிகளாக இருந்த வி.கே.சசிகலா, இளவரசி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 109, 465, 467, 471, 120 பி மற்றும் ஊழல் தடுப்பு சட்டம் 13(1) சி 13 (2) ஆகிய பிரிவுகள் கீ்ழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கு நேற்று நீதிபதி லட்சுமிநாராயணபட் முன் முதன்முறையாக விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரணைக்கு ஏற்று கொண்ட நீதிபதி இவ்வழக்கில் குற்றவாாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள அனைவரும் வரும் மார்ச் 11ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 11ம் தேதி்க்கு ஒத்திவைத்தார். குற்றவாளிகளுக்கு நீதிமன்ற அமீனா மூலம் நேரில் சந்தித்து சம்மன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.