3வது போட்டியிலும் அபார வெற்றி.
வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் 96 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. கே.எல்.ராகுல், ஹூடா, சாஹல் ஆகியோருக்கு பதிலாக குல்தீப், ஷ்ரேயாஸ், தவான் இடம் பெற்றனர். பூரன் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியில் அகீல் உசேனுக்கு பதிலாக ஹேடன் வால்ஷ் சேர்க்கப்பட்டார்.
ரோகித், தவான் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். ரோகித் (13 ரன்), கோஹ்லி (0) இருவரும் அல்ஜாரி ஜோசப் பந்துவீச்சில் அடுத்தடுத்து வெளியேற, தவான் 10 ரன் எடுத்து ஸ்மித் வேகத்தில் ஹோல்டர் வசம் பிடிபட்டார். இந்தியா 9.3 ஓவரில் 42 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறிய நிலையில், ஷ்ரேயாஸ் – பன்ட் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 110 ரன் சேர்த்தனர். பன்ட் 56 ரன் (54 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்), சூரியகுமார் 6 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். பொறுப்புடன் விளையாடிய ஷ்ரேயாஸ் 80 ரன் (111 பந்து, 9 பவுண்டரி) விளாசி ஹேடன் வால்ஷ் சுழலில் பிராவோ வசம் பிடிபட்டார். சுந்தர் – சாஹர் இணைந்து 7வது விக்கெட்டுக்கு 53 ரன் சேர்த்தனர்.
சாஹர் 38 ரன் (38 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), குல்தீப் 5 ரன், சுந்தர் 33 ரன் (34 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), சிராஜ் 4 ரன் எடுத்து ஹோல்டர் வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்தியா 50 ஓவரில் 265 ரன் குவித்து ஆல் அவுட்டானது. பிரசித் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ஹோல்டர் 4, ஜோசப், வால்ஷ் தலா 2, ஸ்மித், ஆலன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 266 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ், இந்திய வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 37.1 ஓவரிலேயே 169 ரன்னுக்கு சுருண்டது.
ஓடியன் ஸ்மித் அதிகபட்சமாக 36 ரன் (18 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் பூரன் 34 ரன் (39 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), ஜோசப் 29 ரன் (56 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), பிராவோ 19, கிங் 14, வால்ஷ் 13 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். புரூக்ஸ், ஆலன் டக் அவுட்டாக, ஹோப் 5, ஹோல்டர் 6 ரன்னில் வெளியேறினர். ரோச் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் சிராஜ், பிரசித் தலா 3, சாஹர், குல்தீப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா ஹாட்ரிக் வெற்றியுடன் 3-0 என தொடரை கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது.
ஷ்ரேயாஸ் ஆட்ட நாயகன் விருதையும், பிரசித் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றனர். அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் 16ம் தேதி நடக்கிறது.