Google Chrome new logo : 8 ஆண்டுகளுக்கு பின் லோகோவை மாற்றிய கூகுள் குரோம்.
கூகுள் குரோம் பிரவுசர் (Google Chrome Browser) 8 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக லோகோவை மாற்றியுள்ளது. கூகுள் நிறுவனம் 2014ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக, தனது குரோம் லோகோவை மாற்றியுள்ளது. லோகோவின் நிறங்கள் எதுவும் மாற்றப்படவில்லை.
இதில் உள்ள சிகப்பு, நீலம், பச்சை மற்றும் மஞ்சள் போன்ற நிறங்களின் சேர்க்கை சற்று அதிகப்படுத்தப்பட்டு நிழல்கள் நீக்கப்பட்டுள்ளன. தற்போது, நடுவில் உள்ள நீல வட்டம் பெரிதாகவும் பிரகாசமாகவும் தெரிகிறது. 2008ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கூகுள் குரோம் பிரவுசரின் லோகோ, இதோடு 3 முறை மாற்றப்பட்டுள்ளது. 2011இல் முதல் முறையாக பிரவுசரின் லோகோ மாற்றப்பட்டது. தொடர்ந்து 2014, 2022ல் புதிய லோகோ வடிவமைப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கூகுள் குரோம் வடிவமைப்பாளரான எல்வின் ஹு, தனது ட்விட்டர் பக்கத்தில் ‘‘பச்சை மற்றும் சிவப்பு நிறங்களின் சில நிழல்கள் அடுத்ததாக வைப்பது விரும்பத்தகாத வண்ண அதிர்வுகளை உருவாக்கியது. எனவே, ஐகானுக்கு மிகவும் நுட்பமான மாற்றத்தை அறிமுகப்படுத்துகிறோம்.8 ஆண்டுகளில் முதல் முறையாக குரோமின் பிராண்ட் ஐகான்களைப் புதுப்பிக்கிறோம்.
புதிய ஐகான்கள் விரைவில் உங்கள் சாதனங்களில் தோன்றத் தொடங்கும்,’ என்று கூறியுள்ளார்/புதிய லோகோ பிப்ரவரி 4 முதல் வெளிவரத் தொடங்கியுள்ளது. ஒருபுறம் கூகுள் குரோம் புரவுசர் லோகோவில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் ட்ரெண்டாகி வரும் வேளையில், லோகோவில் மாற்றத்தை கண்டுபிடிப்பதற்கு டெலெஸ்கோப் தேவைப்படும் போல தெரிகிறது என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.