ஊர் சுற்றலாம் வாங்க! டெல்லியிலிருந்து லண்டன் வரை அழைக்கும் சுற்றுலா நிறுவனம்.! கட்டணம் தெரியுமா.?
உலகம் முழுவதும் பேருந்திலேயே பயணம் செய்வது என்பது ஒரு அற்புதமான விஷயம் அல்லவா.! உலகம் முழுவதையும் எப்படி பேருந்தில் சுற்ற முடியும் என்று யோசிக்கிறீர்களா.. முடியும் உண்மை தான். அட்வென்ச்சர்ஸ் ஓவர்லேண்ட் என்பது ஒரு சுற்றுலா நிறுவனம். இந்நிறுவனம் இந்திய தலைநகர் டெல்லியிலிருந்து – லண்டனுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்து பயண திட்டத்தை சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் அறிவித்தது.
கொரோனா தொற்று பரவல் உள்ளிட்ட சில காரணங்களால் இந்நிறுவனத்தின் இந்த உலகம் சுற்றும் பயண திட்டம் நிறுத்தப்பட்டிருந்தது. இதனிடையே நீண்ட சாலை பயணத்தை மேற்கொள்ள விரும்பும் பயணிகளுக்காக, அட்வென்ச்சர்ஸ் ஓவர்லேண்ட் நிறுவனமானது இந்தியா-மியான்மர் எல்லையில் இயக்கத்தை இயல்பாக்குவதன் மூலம் டெல்லியிலிருந்து லண்டனுக்கு தனது பேருந்து சேவையை தொடங்கும் திட்டத்தை மீண்டும் அறிவித்துள்ளது. டெல்லியில் இருந்து அதிநவீன வசதிகளுடன் பிரிட்டிஷ் தலைநகர் லண்டனை நோக்கி செல்லும் சொகுசு பேருந்துகள் இந்த ஆண்டு செப்டம்பருக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி – லண்டன் செல்வதற்கான பயண பாதைகள் இறுதி செய்யப்பட்ட உடன் அட்வென்ச்சர்ஸ் ஓவர்லேண்ட் நிறுவனத்தின் பஸ் டு லண்டன் (Bus to London) முன்முயற்சியில் பங்கேற்கும் சுற்றுலா பயணிகள் 70 நாட்களில் சுமார் 20,000 கிலோமீட்டர் தூரம் கடந்து லண்டனுக்கு செல்வதற்குள் சுமார் 18 நாடுகளுக்கு பயணிக்க முடியும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. டெல்லியிலிருந்து பேருந்தில் லண்டன் செல்வதற்கு கட்டணம் எவ்வளவு தெரியுமா.? இந்த முழு சாலை பயணத்திற்கும் ரூ.15 லட்சம் செலவாகும் என்று நிறுவனத்தின் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டணத்தில் டிக்கெட்டுகள், விசாக்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் தங்கும் இடம் போன்ற அனைத்து சேவைகளும் அடங்கும்.
கடந்த 46 ஆண்டுகளில் தலைநகர் டெல்லியில் இருந்து லண்டனுக்கு பேருந்தில் பயணம் செய்ய அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் இரண்டாவது முறையாகும். கடந்த 1957-ஆம் ஆண்டு இதே போன்ற பேருந்து சேவையை ஒரு பிரிட்டிஷ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இது கொல்கத்தாவிலிருந்து லண்டன் செல்வதற்கு டெல்லி வழியே இணைக்கப்பட்டது. எனினும் அந்த பேருந்து விபத்துக்குள்ளானதை அடுத்து சில வருடங்களில் சேவை நிறுத்தப்பட்டது.
இதற்கு பிறகு ஆல்பர்ட் டூர்ஸ் என்ற நிறுவனம் சிட்னி-இந்தியா-லண்டன் இடையே டபுள் டெக்கர் பேருந்து சேவையைத் தொடங்கியது. இந்த பேருந்து சேவை 1976 வரை தொடர்ந்தது. ஆனால் ஈரானில் நடந்த உள்நாட்டு கலவரம் மற்றும் இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட கடும் பதற்றம் உள்ளிட்ட சில காரணங்களால் நிறுத்தப்பட்டது.
இந்த புதிய பேருந்து சேவை பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் வழித்தடங்களை விட மியான்மர், தாய்லாந்து, சீனா மற்றும் கிர்கிஸ்தான் வழியே பிரான்சுக்கு பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக English Channel-ஐ கடக்க ஒரு உல்லாச சொகுசு கப்பலும் பயன்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த சுற்றுலா திட்டத்தில் பயணிப்போர் உஸ்பெகிஸ்தானில் உள்ள புகாரா, தாஷ்கண்ட் மற்றும் சமர்கண்ட் ஆகிய வரலாற்று நகரங்களுக்கும், கஜகஸ்தானில் உள்ள காஸ்பியன் கடலிலும் பயணம் செய்வார்கள்.
பயணத்தின் கடைசி கட்டத்தில் மாஸ்கோ, வில்னியஸ், ப்ராக், பிரஸ்ஸல்ஸ் மற்றும் பிராங்பேர்ட் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஐரோப்பிய நகரங்களை சுற்றுவதற்கான வாய்ப்பையும் பெறுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரான்சின் கலேஸிலிருந்து இங்கிலாந்தின் டோவர் நகருக்குப் பேருந்தை எடுத்துச் செல்ல ஒரு கப்பல் சேவை பயன்படுத்தப்படும். 2 மணிநேர கப்பல் பயணத்திற்கு பின் பஸ் லண்டனுக்கு புறப்படும். மொத்தம் இந்த பேருந்தில் ஒரே நேரத்தில் 20 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். ஒவ்வொரு பயணிகளுக்கும் தனித்தனி அறை இருக்கும். இதில் சாப்பிட, தூங்க என அனைத்து வசதிகளும் இருக்கும்.