மோடி வந்தால் சந்திப்போம்! – சம்பந்தன் தெரிவிப்பு.
“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை வந்தால் அவரைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரில் சந்திக்கும். தமிழர் விவகாரம் தொடர்பில் அவருடன் நாம் பேசுவோம்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இலங்கையில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள 5 ஆவது பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார கூட்டுறவுக்கான வங்காள விரிகுடா முயற்சி (பிம்ஸ்டெக்) மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பிம்ஸ்டெக் அமைப்பின் தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் அரச தலைவர்களும் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏதாவது தகவல் தெரிவிக்கப்பட்டதா என்று அதன் தலைவர் இரா.சம்பந்தனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் தொடர்பில் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திடமிருந்து எமக்கு உத்தியோகபூர்வ தகவல் எதுவும் கிடைக்கவில்லை. எனினும், இந்தியப் பிரதமர் எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை வந்தால் அவரைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரில் சந்திக்கும். தமிழர் விவகாரம் தொடர்பில் அவருடன் நாம் பேசுவோம்.
கடந்த காலங்களில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வந்த வேளைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அவர் தவறாமல் சந்தித்துவிட்டே சென்றார். இம்முறையும் அவர் இலங்கை வந்தால் எம்மை அவர் கட்டாயம் சந்திப்பார்” – என்றார்.