கோவா, உத்தரகாண்ட் சட்டப்பேரவைக்கு நாளை தேர்தல்… உபியில் 2ம் கட்ட வாக்குப்பதிவு
கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களில் நாளை ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. உத்தரபிரதேசத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை 55 தொகுதிகளில் நடக்கிறது.
உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தலைவர்களின் பரப்புரை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் திங்கள் கிழமை தேர்தலை எதிர்கொள்ளும் உத்தராகண்ட்டில் பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
உத்தராகண்டின் ருத்ரபூர் பொது கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கொரோனா பெருந்தொற்று காலத்தில், மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்களை வழங்கி, மத்திய அரசு உதவி செய்ததாக கூறினார். அச்சமயத்தில் உத்தராகண்டில் காங்கிரஸ் அரசு இருந்திருந்தால், பெருமளவில் ஊழல் நடைபெற்றிருக்கும் எனவும் அவர் கூறினார்.
கதிமா பகுதியில் பரப்புரை மேற்கொண்ட பிரியங்கா காந்தி, மக்களின் வளர்ச்சிக்காக பணியாற்றுவதே அரசியல் தலைவர்களின் கடமை என்றார். ஆனால் உத்தராகண்ட் முதலமைச்சர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் சுய வளர்ச்சிக்கான பணிகளை மட்டுமே செய்வதாக குற்றம்சாட்டினார். வேலை வாய்ப்பு இல்லாததால் உத்தராகண்டில் இருந்து வெளியேறும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பஞ்சாப்பில் பாஜக, பஞ்சாப் லோக் காங்கிரஸ் கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதில், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவா மற்றும் உத்தரகாண்டில் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. உத்தரப் பிரதேசத்தில் 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.