வாக்கு சேகரிக்க சென்ற பாஜக மண்டல துணை தலைவரின் மண்டை உடைப்பு: திமுக பிரமுகர் கைது
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்கு சேகரிக்க சென்ற பாஜக மண்டல துணை தலைவரின் மண்டையில் தாக்குதல் நடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் செங்கலால் தாக்கிய திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ம் தேதி நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு ஒரு நாளே உள்ள நிலையில், பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. அரசியல்கட்சித் தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, தாம்பரம் மாநகராட்சி, 44வது வார்டுக்குட்பட்ட சிட்லபாக்கம் பகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக சிட்லபாக்கம் மண்டல துணை தலைவர் பழனி கலைமகள் தெரு, குப்புசாமி நகர் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது 44,வது வார்டு திமுக உறுப்பினர் கார்த்திக் என்பவர் குடிபோதையில் பாஜக பிரமுகரிடம் தகராறில் ஈடுபட்டு செங்கலை எடுத்து அடித்து மண்டையில் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் தலையில் காயமடைந்த பாஜக பிரமுகர் தனியார் மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்று அங்கு அவருக்கு 6 தையல் போடப்பட்டது. பின்னர் இது குறித்து சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் திமுக பிரமுகர் கார்த்திக் கைது செய்யப்பட்டு அவர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.