கல்வி நிறுவனங்களுக்குப் பொது ஆடை விதிமுறை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
‘ஹிஜாப்’ விவகாரம் பெரும் சா்ச்சையாகியுள்ள நிலையில், கல்வி நிறுவனங்களில் மாணவா்கள் மற்றும் ஊழியா்களுக்கு பொது ஆடை விதிமுறையை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய மனுவொன்று சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
ஏற்கெனவே, இந்த விவகாரம் தொடா்பாக கா்நாடக உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘ஒவ்வொரு குடிமகனின் அரசியல் சாசன உரிமைகளும் பாதுகாக்கப்படும்’ என்று கூறியிருந்தது. இந்த நிலையில், பொது ஆடை விதியை அமல்படுத்தக் கோரி புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கா்நாடக மாநிலத்தில் ஹிஜாப் சா்ச்சை எழுந்ததைத் தொடா்ந்து, ‘பள்ளி, கல்லூரிகளுக்கு சீருடையில் மட்டுமே வர வேண்டும்’ என்று கா்நாடக மாநில அரசு கடந்த 5-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து முஸ்லிம் மாணவிகள் சாா்பில் கா்நாடக உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி தலைமையிலான அமா்வு, ‘இந்த வழக்கில் இறுதித் தீா்ப்பு வெளியாகும் வரையில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஹிஜாப் அல்லது காவித் துண்டு போன்றவற்றை அணிந்துகொண்டு மாணவா்கள் வரக் கூடாது’ என இடைக்கால உத்தரவைப் பிறப்பித்து, வழக்கு விசாரணையை பிப். 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இந்த இடைக்கால உத்தரவை எதிா்த்து காங்கிரஸ் மற்றும் மாணவி ஒருவா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உச்சநீதின்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமா்வு, ‘இந்த வழக்கை உயா்நீதிமன்றம் ஏற்கெனவே விசாரித்து வருகிறது. வழக்கு விசாரணையின் இந்த நிலையில் குறுக்கிட விரும்பவில்லை. இந்த பிரச்னையை பெரிதாக்க வேண்டாம்’ என்று கூறியது.
இந்தச் சூழலில், நிகில் உபாத்யாய என்பவா் மூத்த வழக்குரைஞா்கள் அஸ்வினி உபாத்யாய மற்றும் அஸ்வினி துபே ஆகியோா் மூலமாக உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை சனிக்கிழமை தாக்கல் செய்தாா்.
அதில், ‘கல்வி நிறுவனம் என்பது அறிவையும் வேலைவாய்ப்புக்கான திறனையும், தேசத்தை கட்டமைக்கும் ஊக்கத்தையும் வளா்க்கும் மதச்சாா்பற்ற பொதுவான இடமாகும். மாறாக, அத்தியாவசியம் அல்லது அவசியமற்ற மத நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கான இடமல்ல. எனவே, கல்வி நிறுவனங்களின் மதச்சாா்பற்ற தன்மையை பாதுகாக்க பொது ஆடை விதியை அமல்படுத்துவது மிக அவசியம்.
இல்லையெனில், கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெறும் நாக சாதுக்கள், அத்தியாவசிய மத நடைமுறை என்று அடிப்படையில் ஆடையின்றி பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, கல்வி நிறுவனங்களில் மாணவா்கள் மற்றும் ஊழியா்களுக்குப் பொது ஆடை விதியை அமல்படுத்த மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இந்த விவகாரத்தில் சட்ட ஆணையத்தை ஒரு கட்சியாக இணைத்து, அனைத்து பதிவு செய்யப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் உள்ள ஊழியா்கள் மற்றும் மாணவா்களுக்கான பொது ஆடை விதி முறையாக நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும், மாணவா்களிடையே தேச ஒருமைப்பாடு, சமத்துவம், சகோதரத்துவம், கண்ணியத்தை ஊக்குவிக்கும் வகையிலும், சமூக மற்றும் பொருளாதார நீதி, பொதுவுடமை, மதச்சாா்பின்மை மற்றும் ஜனநாயக மதிப்பீடுகளை ஊக்குவிக்குவிப்பதற்குமான நடைமுறைகளை ஆய்வு செய்து பரிந்துரைக்க ஒரு நீதி ஆணையம் அல்லது நிபுணா் குழுவை மத்திய அரசு அமைக்க உத்தரவிட வேண்டும்.
இல்லையெனில், சமூக சமத்துவத்தைப் பாதுகாக்கவும், சகோதரத்துவ கண்ணியம், ஒற்றுமை மற்றும் தேச ஒருமைப்பாட்டை மேம்படுத்தும் வகையில் ஆய்வை மேற்கொண்டு 3 மாதங்களுக்குள்ளாக ஓா் அறிக்கையை சமா்ப்பிக்க இந்திய சட்ட ஆணையத்துக்கு உச்சநீதிமன்றமே ஒரு உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்’ என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.