சட்டமன்ற தேர்தல்: உத்தரபிரதேசம், கோவா, உத்தராகண்ட் மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு!

உத்தரபிரதேச மாநிலத்தில் 2ம் கட்டமாகவும், கோவா, உத்தராகண்ட் மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

உத்தரபிரதேச மாநிலத்தில் மொத்தம் 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், திங்கள்கிழமை 55 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

2ம் கட்ட தேர்தலில் 586 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சுமார் 2 கோடி பேர் வாக்களிக்க உள்ள நிலையில், 17 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சஹரான்பூர், மொராதாபாத், ராம்பூர் உள்ளிட்ட தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 5 அமைச்சர்கள் இத்தேர்தலில் மீண்டும் களம் இறங்கியுள்ளனர்.

நிதியமைச்சர் சுரேஷ் குமார் கண்ணா ஷாஜகான் பூரிலும், பள்ளி கல்வித்துறை அமைச்சர் குலாப் தேவி சந்தவுசி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

பிலாஸ்பூர் தொகுதியில் நீர்வளத்துறை அமைச்சர் பல்தேவ் சிங் ஆலாக்கும், நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சரான மகேஷ் சந்திர குப்தா, பத்வான் தொகுதியிலும் களம் இறங்கியுள்ளனர்

வருவாய்த்துறை அமைச்சர் சத்ரபால் கேங்வார் பஹேரி தொகுதியில் போட்டியிடுகிறார். சமாஜ்வாடி கட்சியை பொறுத்தவரை ஆசாம் கான் ராம்பூர் தொகுதியிலும், கார்த்திக் ராணா தியோபந்த் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். .

கோவா மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக திங்கள்கிழமை சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

மொத்தம் 301 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில், 11 லட்சத்து 60 ஆயிரம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். முதலமைச்சர் பிரமோத் சாவந்த் சான்கியூலிம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

பாஜகவின் கோட்டையாக கருதப்படும் பனாஜி தொகுதியில், முன்னாள் முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் மகன் உத்பால் பாரிக்கருக்கு சீட் வழங்க பாஜக மறுத்ததால், சுயேட்சையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் தற்போதைய எம்எல்ஏ அட்டானாசியோ மான்செரேட் களம் இறக்கப்பட்டுள்ளார்.

உத்தராகண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளுக்கும் திங்கள்கிழமை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெறும் அம்மாநிலத்தில் மொத்தம் 632 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கதிமா தொகுதியிலும், முன்னாள் முதலமைச்சர் ஹரிஷ் ராவத், லல்குவான் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.