ரஸ்ய-உக்ரைன் போர் பதற்றத்தின் நிலை என்ன? : சுவிசிலிருந்து சண் தவராஜா
கடந்த சில வாரங்களாகக் கொழுந்து விட்டெரிந்த ரஸ்ய-உக்ரைன் பதற்றம் தணிவதற்கான அறிகுறிகள் தென்படுவதைப் பார்க்க முடிகின்றது.
உக்ரைன் மீது தாக்குதல்களை நடத்தும் எண்ணம் தமக்கு இல்லை என ரஸ்யத் தரப்பில் இருந்து மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்லப்பட்டாலும் அதனைச் செவிமடுக்க மறுத்துவந்த மேற்குலகம், முதற் தடவையாக ராஜதந்திர ரீதியில் பிரச்சனையை அணுக முன்வந்துள்ளது.
அதன் ஒரு கட்டமாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ரஸ்யா சென்று அதிபர் விளாடிமிர் புட்டினைச் சந்தித்துக் கலந்துரையாடி உள்ளார். தொடர்ந்து உக்ரைன் சென்ற அவர் அதிபர் விளாடிமிர் ஸெலன்ஸ்கியுடன் உரையாடிவிட்டு பேர்லின் சென்று அங்கே யேர்மன் அதிபர் ஒலப் ஷோல்ஸ் மற்றும் போலந்து அதிபர் டுடா ஆகியோருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
மக்ரோன் மாஸ்கோவில் புட்டினுடன் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த அதே சமயம் யேர்மன் அதிபர் ஷோல்ஸ் அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் அவர்களுடன் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தார். அங்கே பேச்சுக்களை முடித்துக் கொண்டு திரும்பியிருந்த அவர் பேர்லினில் நடத்திய பேச்சுக்கள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.
மாஸ்கோவில் பேச்சுக்களில் ஈடுபட்ட தலைவர்கள், பேச்சுக்களின் முடிவில் வெளியிட்ட அறிக்கைகள் பதட்டத்தைத் தணிக்கக் கூடியவையாக அமைந்திருந்தன. 1991இல் சோவியத் ஒன்றியம் உடைந்தபோது, நேட்டோ விஸ்தரிக்கப்படாது என மேற்குலகு வழங்கியிருந்த உறுதிமொழி மதிக்கப்பட வேண்டும் என்பதே புட்டினின் திடமான கோரிக்கையாக உள்ளது.
நேட்டோவின் ஒரு மிக முக்கிய அங்கத்துவ நாடாகக் கருதப்படும் பிரான்ஸ், உறுப்பு நாடுகளைக் கலந்து கொள்ளாது வாக்குறுதி எதனையும் வழங்க முடியாது என்பதே யதார்த்தம் ஆயினும், மாஸ்கோவில் வாக்குறுதி ஒன்றை வழங்கியதாகச் செய்திகள் கசிந்து உள்ளன. புட்டினின் கோரிக்கையை ஏற்று, உக்ரைன் நடுநிலை நாடாக விளங்கும் என்ற உறுதிமொழியை அவர் வழங்கியுள்ளதாக இந்தத் தகவல் கூறுகிறது. அது மாத்திரமன்றி, உக்ரைன் தலைநகர் கீவ் இல் ஸெலன்ஸ்கியுடன நடைபெற்ற பேச்சுக்களின் இறுதியில், யேர்மன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தில் ரஸ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் எட்டப்பட்ட ‘மின்ஸ்க் உடன்படிக்கை’யை மதித்து நடக்க சம்மதத்தைப் பெற்றுவிட்டதாகவும் தெரிய வருகின்றது.
‘நேட்டோ எப்போதே செத்து விட்டது’ என ஏற்கனவே பிரகடனம் செய்திருந்த மக்ரோன், ஐரோப்பாவுக்கென தனியானதொரு பாதுகாப்பு அமைப்பு செய்து கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்தை உடையவர். ரஸ்யாவுடனான ஆயுத மோதலையோ, புதிதாக முன்னெடுக்கப்படும் பொருளாதாரத் தடை உள்ளிட்ட நடவடிக்கைகளையோ ஆதரிக்காத ஒருவர். எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் பிரான்சில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் இரண்டாவது தடவையாகப் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் ஒருவர். தனது சகாக்களான மேற்குலக நாடுகள் ரஸ்யாவுக்கு எதிராக அணிதிரண்டு நிற்கும் தறுவாயில், தனது அரசியல் எதிர்காலத்தைப் பற்றிக் கூடக் கவலை கொள்ளாமல் சமாதான முயற்சியில் ஈடுப்பட்டமைக்காக அவரை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்.
மறுபுறம், இதுகாலவரை மின்ஸ்க் உடன்படிக்கை தொடர்பில் அதிருப்தி தெரிவித்துவந்த உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி, மக்ரோனின் முயற்சியை மதித்து அந்த உடன்படிக்கையை மதித்துநடக்க முன்வந்தமைக்காக அவரையும் பாராட்டியே ஆகவேண்டும்.
ஆரம்பம் முதலே ‘தாக்குதல் நடைபெற்றால் ரஸ்யா மீது எத்தகைய பொருளாதாரத் தடைகளை விதிப்பது’ என்பது தொடர்பில் ஆராய்வதிலும், உக்ரைனுக்கு ஆயுதம் வழங்குவதிலும் ஆர்வம் காட்டிவந்த மேற்குலகம், தாமதமாகவேனும் ராஜதந்திர வழிமுறைகளை நாட ஆரம்பித்திருப்பது பாராட்டத்தக்கது.
தற்போதைய நிலையில், ரஸ்ய-உக்ரைன் பதற்றம் தற்காலிகமாகவேனும் ஒரளவு தணிவு நிலைக்கு வந்திருப்பது மகிழ்ச்சியே. ஆனால், இந்த மகிழ்ச்சி நீடிக்குமா என்பதே கேள்வி. இது அமெரிக்காவின் கையிலேயே பெரிதும் தங்கியுள்ளது. ரஸ்ய-உக்ரைன் விவகாரம் ஐரோப்பியக் கண்டத்துக்கு உரிய ஒரு பிரச்சனையே ஆயினும், ஆரம்பம் முதலே அமெரிக்காவே இந்த விடயத்தை ஊதிப் பெருப்பித்து பரப்புரைகளை மேற்கொண்டு வந்ததை அனைவரும் அறிவோம். பெப்ரவரி 18 முதல் 20 வரை யேர்மனியின் மியூனிச் நகரில் ‘மியூனிச் பாதுகாப்பு மாநாடு’ நடைபெற உள்ளது. அமெரிக்கா தலைமையில் மேற்குலக நாடுகள் பலவற்றின் தலைவர்களும், வல்லுநர்களும் கலந்து கொள்ளும் மாநாட்டில், அமெரிக்க உதவி அரசுத் தலைவர் கமலா ஹாரிஸ் கலந்து கொள்ள இருக்கிறார். அவரின் வருகையின் பிரதான நோக்கமே ‘ரஸ்யப் படையெடுப்புக்கு எதிராக நாடுகளை அணிதிரட்டுவது’ என்பதாகவே உள்ளது. இதன் முழுமையான அர்த்தம் என்ன என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
எனினும், ரஸ்யாவுக்கு எதிரான அணிதிரட்டலில் அமெரிக்காவுக்கு – தற்காலிகமாகவேனும் – பின்னடைவு ஏற்பட்டுள்ளதோ என்கின்ற ஐயம் எழுகின்றது. பனிக்கால ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வுகளுக்காக சீனா சென்ற புட்டின் அங்கே சீனத் தலைவர் சீ சின்பிங் அவர்களைச் சந்தித்து உரையாடியுள்ளார். இதன்போது உக்ரைன் விவகாரத்தில் ரஸ்யாவுக்கு உறுதுணையாக நிற்பதாக சீனா அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கொள்ள வேண்டியுள்ளது. சீனாவும் ரஸ்யாவும் அளவுக்கு அதிகமாக நெருங்கும் வாய்ப்பைத் தந்துவிடக் கூடாது என்பது மேற்குலகின் சிந்தனைகளுள் ஒன்று. மேற்குலகைப் பொறுத்தவரை இரண்டு நாடுகளுமே எதிரி நாடுகள் என்ற வரையறைக்குள் இருந்தாலும், சீனாவே மிக மோசமான எதிரி என்பது அவற்றின் நிலைப்பாடு. மேற்குலகைப் பொறுத்தவரை ஏதோ ஒரு வகையில் ரஸ்யாவைக் கையாண்டு கொள்ளலாம் என்ற நம்பிக்கை அவற்றுக்கு உள்ளதாகத் தெரிகின்றது. எனவே, உக்ரைன் விடயத்தில் அளவுக்கும் அதிகமாகச் சென்று தமக்குத் தாமே அழிவைத் தேடிக் கொள்ளக் கூடாது என்பதில் அது கவனமாக உள்ளது.
உக்ரைன் விடயத்தில் மேற்குலகு முன்வைக்கும் வாதம், ‘ஒரு நாடு, தான் விரும்பும் அணியில் இணைந்து கொள்ளும் உரிமை அந்த நாட்டுக்கு உள்ளது’ என்பதே. இந்த வாதம் சரியானால் தென் அமெரிக்காவில் உள்ள இடதுசாரி நாடுகளான – மிகவும் சரியாகச் சொல்வதானால் அமெரிக்காவின் எதிரி நாடுகளான – கியூபா, வெனிசுவேலா மற்றும் நிக்கரகுவா ஆகிய நாடுகளில் தனது படைகளை நிலைநிறுத்தும் உரிமை உள்ளதாக ரஸ்யா முன்வைத்துள்ள வாதம் அமெரிக்காவின் கண்டனத்துக்கு இலக்காகி உள்ளது. உக்ரைனுக்கு உதவுவதாகக் கூறிக் கொண்டு தான் மேற்கொள்ளும் நடவடிக்கை தனக்கே வினையாகி விடுமோ என்ற அச்சம் தற்போது அமெரிக்கத் தரப்பில் ஏற்பட்டுள்ளதை ஊகிக்க முடிகின்றது.
இது தவிர, மேற்குலகினால் தொடர்ந்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டாக உள்ள “உக்ரைன் எல்லையில் ரஸ்யாவின் ஒரு இலட்சம் வரையிலான படையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்” என்ற குற்றச்சாட்டு தொடர்பில் ரஸ்யா இதுவரை எதிர்வினை எதனையும் ஆற்றவில்லை. அவ்வாறு படையினர் நிலை கொண்டிருப்பது தனது உள்நாட்டு விவகாரம் எனத் தெரிவித்துள்ள ரஸ்யா, தனது படைகளை அகற்றிக் கொள்ளும் சமிக்ஞை எதனையும் இதுவரை வெளிப்படுத்தவில்லை. மறுபுறம், உக்ரைனுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் மற்றொரு நட்பு நாடான பெலாரஸ் நாட்டில் இணைந்த போர்ப் பயிற்சியில் ரஸ்யா ஈடுபட்டு வருகின்றது. இதன் மூலம் தனது திடமான நிலைப்பாட்டை ரஸ்யா வெளிப்படுத்தி உள்ளதாகவே கொள்ளப்படலாம்.
உலகில் அணுவாயுதங்களைத் தம் வசம் கொண்டுள்ள நாடுகளுள் ஒன்று ரஸ்யா. அதிலும் அணுவாயுத உற்பத்தி நாடுகளுள் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் உள்ள நாடு. போர் ஒன்று மூளுமானால் அணுவாயுதங்களைப் பாவிக்க வேண்டிய ஏதுநிலை ஏற்படுமானால் உலகின் நிலை என்னாகும் என்பதை நினைக்கும் போதே அச்சம் எழுகின்றது.
உக்ரைன் விவகாரத்தைப் பொறுத்தவரை, ரஸ்யாவின் பாதுகாப்பு தொடர்பான கரிசனைகளைப் புரிந்து கொள்வதில் மேற்குலகு ஆரம்பம் முதலே தவறிழைத்து வருவதைப் பார்க்க முடிகின்றது.
இந்த நிலைமையை விளக்குவதற்கு ரஸ்ய வெளியுறவு அமைச்சர் சேர்கை லவ்ரோவ் அவர்களின் கூற்றை மேற்கோள் காட்டுவது பொருத்தமானதாக அமையலாம். உக்ரைன் விவகாரம் தொடர்பான பேச்சுக்களை நடாத்த பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ் மாஸ்கோ சென்றிருந்தார். இருவருக்கும் இடையிலான பேச்சுக்கள் தொடர்பில் ஊடகர்களிடம் கருத்துத் தெரிவித்த லவ்ரோவ்வின் வாசகம் இது. “வாய் பேச முடியாத ஒருவருக்கும், காது கேட்காத இன்னொருவருக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் அது.”
மேற்குலகிற்கும் ரஸ்யாவுக்கும் இடையில் நடைபெறும் இழுபறியைப் புரிந்து கொள்ள இதைவிடச் சிறந்த விளக்கம் எதுவும் இருக்க முடியாது என்பதே உண்மை.