உக்ரைனிலுள்ள இலங்கையர்கள் குறித்து வெளிவிவகார அமைச்சு அறிக்கை…..

உக்ரைனில் வாழ்ந்து வரும் இலங்கையர்கள் தொடர்பில் உன்னிப்பாக அவதானிக்கப்படுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. உக்ரைனில் நிலவி வரும் பதற்ற நிலைமையினால் அநேக நாடுகள் தங்கள் நாட்டு பிரஜைகளை அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு பணித்துள்ளன.
எவ்வாறெனினும் இலங்கையர்களுக்கு அவ்வாறான அறிவுறுத்தல்கள் எதனையும் அரசாங்கம் இதுவரையில் வழங்கவில்லை. உக்ரைனில் சுமார் நாற்பது இலங்கை மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் இலங்கையர்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் கிடையாது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
உக்ரைனில் இலங்கைத் தூதரகம் இல்லாத போதிலும், துருக்கிக்கான இலங்கைத் தூதரகம் ஊடாக உக்ரைன் வாழ் இலங்கையர்கள் குறித்து கண்காணிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவசர நிலைமை ஏற்பட்டால் உக்ரைனிலிருந்து இலங்கையர்களை வெளியேற்றிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.