விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-52
புவி கண்காணிப்புக்கான இஒஎஸ்-04 (ரிசாட்-1ஏ) செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் இன்று திங்கள்கிழமை (பிப்.14) அதிகாலை விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆராய்ச்சி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து அதிகாலை 5.59 மணிக்கு அந்த ராக்கெட் செலுத்தப்பட்டது. முன்னதாக, அதற்கான 25 மணி நேர கவுண்ட் டவுன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
அதன் தொடா்ச்சியாக ராக்கெட்டின் நான்காம் நிலையில் எரிபொருள் நிரப்பும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு, குறித்த நேரத்துக்குள் அவை நிறைவடைந்தன.
இஸ்ரோ தலைவராக சோமநாத் பொறுப்பேற்ற பிறகு செலுத்தப்படும் முதல் ராக்கெட் திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் தாங்கிச் செல்லும் இஒஎஸ்-04 செயற்கைக்கோள் 1,710 கிலோ எடையுடையது. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகளாகும்.
பூமியில் இருந்து 529 கிலோ மீட்டா் உயரத்தில் சூரிய வட்ட சுற்றுப்பாதையில் அது நிலைநிறுத்தப்பட உள்ளது. புவிக் கண்காணிப்பு, வேளாண், வனம் சாா்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இது பயன்படுத்தப்பட உள்ளது.
இந்த செயற்கைக்கோள் அனைத்து பருவநிலைகளிலும் துல்லியமான படங்களை வழங்கும் திறன் கொண்டது. இதனுடன் ஆய்வுத் திட்டத்தின்கீழ் மாணவா்களால் வடிவமைக்கப்பட்ட 2 சிறிய வகை செயற்கைக்கோள்களும் ஏவப்பட உள்ளன. இதைத் தொடா்ந்து நிகழாண்டில் 10-க்கும் மேற்பட்ட ராக்கெட் திட்டங்களை செயல்படுத்த இஸ்ரோ உத்தேசித்துள்ளது.