முதல் பட்டியலின பெண் மேயரை வரவேற்க காத்திருக்கும் சென்னை மாநகராட்சி! பதவிக்கு ஏன் அப்படியொரு முக்கியத்துவம்?
தமிழ்நாட்டில் முதன்முறையாக, பெருநகர சென்னை மாநகராட்சியானது அதன் முதல் தலித் பெண் மேயரை பிப்ரவரி 19 அன்று நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்க இருக்கிறது. அதிக மதிப்புடைய சென்னை மேயர் பதவி ஒரு காலத்தில் தமிழகத்தின் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினால் 1996 முதல் 2002 வரை வகிக்கப்பட்டது. சென்னையின் 37வது மேயராக இருந்த அவருக்கு, தீவிர அரசியலின் தொடக்கமாக மேயர் பதவி அமைந்தது.
பத்தாண்டுகளுக்குப் பிறகு, தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், சென்னை மாநகராட்சியின் மேயர் பதவியை பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் வகிப்பார் என்று அறிவித்தது. தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் கிட்டத்தட்ட 80 சதவீத வார்டுகளில் ஆளும் கட்சியான திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும் நேரடியாகப் போட்டியிடுகின்றன. திமுகவும், அதிமுகவும் அதிக இடங்களில் வெற்றி பெற்று மேயர் பதவிக்கு வர வேண்டும் என்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 21 மாநகராட்சிகளின் மேயர், துணை மேயர் உள்ளிட்ட மொத்தம் 1,298 பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் மூலம் மார்ச் 4ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
முன்னதாக, சென்னை மாநகராட்சி, 1957 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் முறையே தாரா செரியன் மற்றும் காமாட்சி ஜெயராமன் ஆகிய இரு பெண் மேயர்களைக் கண்டது. சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் 32 வார்டுகள் பட்டியல் சாதி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியில் 165 வார்டுகளில் திமுக வேட்பாளர்களும், மீதமுள்ள 35 வார்டுகளில் அக்கட்சியின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிடவுள்ளதாக பட்டியலின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக, அதிமுக, பாமக, பாஜக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, தேமுதிக, அமமுக என எட்டுமுனை போட்டி நிலவுவதால் சென்னையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த மே மாதம் ஆட்சி அமைத்த பிறகு, 2021 அக்டோபரில் புதிதாக அமைக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சியைத் தவிர, புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சி, மற்றும் ஆவடி மாநகராட்சி முறையே பட்டியல் சாதிப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், திண்டுக்கல், காஞ்சிபுரம், கடலூர், கரூர், வேலூர், சிவகாசி, மதுரை, ஈரோடு மற்றும் கோவை மாநகராட்சிகள் பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
2016ஆம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா, பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்றினார். இறுதியில், சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில், 100 வார்டுகள் பெண்களுக்கு குறிக்கப்பட்டு, அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மேயரை தேர்வு செய்வார்கள். திமுகவின் முன்னோடியான மு.கருணாநிதிதான் 1996ஆம் ஆண்டு மேயர் பதவிக்கு நேரடித் தேர்தலை அறிமுகப்படுத்தி, அதே ஆண்டில் தனது மகனும் தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலினை நேரடியாக சென்னை மாநகராட்சி மேயராகக் கொண்டுவந்தார்.
பின்னர், 2006ல் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த கட்சி முடிவு செய்தது. இதற்கிடையில், சென்னை மேயர் பதவியை தற்போதைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வகித்தார். இதை வேறு வடிவமாக மாற்றி, 2011ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியதும், உள்ளாட்சித் தலைவர்களை மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் சட்டம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு, உள்ளாட்சித் தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தலை நடத்த அதிமுக முடிவு செய்தது, ஆனால், அதன்பின், உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை.
பின்னர், 2019ஆம் ஆண்டு அதிமுக அரசால் ஊரகப் பகுதிகளில் மட்டும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. மறைமுகத் தேர்தல் மூலம் மேயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், நிர்வாகிகள் விதிமுறைகளை மீறினால் அவர்களை மாற்ற முடியும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் பெரும்பாலான வார்டுகளில் திமுகவும் அதிமுகவும் நேரடியாகப் போட்டியிடுகின்றன. சென்னை மேயர் பதவிக்கு திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலினைப் போட்டியிட வைப்பது குறித்து அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்ட நிலையில், கட்சியின் இளைஞரணி தலைவராக இருந்து பின் 1996ஆம் ஆண்டு சென்னை மேயர் பதவியை வகித்த அவரது தந்தை மு.க.ஸ்டாலினைப் போலவே உதயநிதியும் ஆவார் என பேசப்பட்ட நிலையில், சென்னை மாநகராட்சி மேயர் பதவியை பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கி அறிவித்தது திமுக.