பிரதமரின் விவசாய உதவித் திட்டம்: யார் பலன் பெற முடியாது? சந்தேகங்களும்.. விளக்கங்களும்..
விவசாயிகளுக்கான பிரதமரின் நிதியுதவி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மத்திய அரசு கடந்த மாதம் பத்தாவது இன்ஸ்டால்மென்ட் தொகையை விடுவித்தது. இந்த திட்டம் தொடர்பான விவரங்களை விவசாயிகள் சரிபார்ப்பதற்கு திட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளமான https://pmkisan.gov.in./ என்ற தளத்தை பார்வையிடலாம். தற்போதைய நிலவரப்படி தகுதிவாய்ந்த ஒவ்வொரு விவசாயிக்கும் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000 என்ற வகையில், ஆண்டில் மூன்று முறை பணம் செலுத்தப்படுகிறது.
ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் பயன் அடையலாம்?
பிரதமர் நிதியுதவித் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பம் என்பதற்கான வரையறையை மத்திய அரசு தெளிவாக குறிப்பிட்டிருக்கிறது. அதன்படி ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி மற்றும் சிறு வயது குழந்தை ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். எனினும், திட்ட விதிமுறைகளின்படி தகுதிவாய்ந்த குடும்பங்களை மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் அடையாளம் காணலாம்.
விதிமுறைகளின்படி இந்த திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பலன் பெற முடியும். கணவன், மனைவி இருவரும் பலன் பெற முடியாது. பிரதமரின் நிதியுதவித் திட்டம் என்பது ஆதார் டேட்டா பேஸ் அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது என்பதை பயனாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். நில ஆவணங்களில் உள்ள பெயர்கள் தொடர்புடைய குடும்பத்தில் உள்ள அனைவரது விவரங்களும் இந்த திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன.
யார் பலன் பெற முடியாது?
* உயர்ந்த பொருளாதார நிலை உடைய பயனாளிகள் இந்த திட்டத்தின் கீழ் பலன் அடைய முடியாது.
* நிறுவன அமைப்பில் நிலம் வைத்திருப்பவர்கள் திட்டத்தின்கீழ் நிதி உதவி பெற முடியாது.
* முன்னாள் மற்றும் இந்நாள் மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற மக்களவை அல்லது மாநிலங்களவையில் முன்னாள் மற்றும் இந்நாள் உறுப்பினர்கள், சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவையின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் இந்நாள் உறுப்பினர்கள், மாவட்ட பஞ்சாயத்துகளின் முன்னாள் மற்றும் இந்நாள் தலைவர்கள் ஆகியோர் இந்த திட்டத்தின் கீழ் பலன் அடைய தகுதி கிடையாது.
* பணி நிறைவு பெற்ற அல்லது ஓய்வு பெற்ற பணியாளர்களின் மாத ஓய்வூதியம் ரூ.10 ஆயிரத்திற்கு மேல் இருந்தால் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது.
திட்டம் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்
* சிறு,குறு விவசாயிகள் மற்றும் நலிவடைந்த விவசாயிகள் பலன் அடையும் வகையில் அவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் கீழ் நாடெங்கிலும் 12 கோடி விவசாயிகள் பலனடைந்து வருகின்றனர்.
* விவசாயிகளிடம் எத்தனை ஏக்கர் இடம் இருக்கிறது என்பதை கணக்கில் கொள்ளாமல் இந்தத் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படுகிறது.
* விவசாயிகளுக்கு வழங்கப்படும் பணம் நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
* திட்டத்தின் 10ஆவது இன்ஸ்டால்மென்ட்படி 10 கோடி பயனாளிகளுக்கு ரூ.20,000 கோடி பணம் கொடுக்கப்பட்டுள்ளது.
* இந்த திட்டத்தின் பயனாளிகள் பட்டியலில் தங்கள் பெயர் விவரம் விடுபட்டிருந்தால், அது குறித்து மாவட்ட அளவிலான குறைதீர் கண்காணிப்புக் குழுவினரை விவசாயிகள் அணுகி, தங்கள் பெயரை இணைக்கும் படி கோரலாம்.