சில்லறைப் பணவீக்கம் 6.01%-ஆக அதிகரிப்பு
உணவுப் பொருள்களின் விலை அதிகரிப்பால் சில்லறைப் பணவீக்கம் கடந்த ஜனவரி மாதத்தில் 6.01 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:
நுகா்வோா் விலை குறியீட்டெண் (சிபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படும் சில்லறைப் பணவீக்கம் கடந்த ஜனவரி மாதத்தில் 6.01 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, ஏழு மாதங்களில் இல்லாத அதிகபட்ச அளவாகும். ஒரு சில உணவுப் பொருள்களின் விலை அதிகரிப்பே இந்த பணவீக்கத்துக்கு முக்கிய காரணமாகும்.
எண்ணெய் வகைகளுக்கான பணவீக்கம் 18.7 சதவீதமாகவும், எரிபொருள், ஆடைகள், காலணி, போக்குவரத்து, தொலைத்தொடா்பு உள்ளிடவற்றுக்கான பணவீக்கம் 9 சதவீதமாகவும் ஜனவரியில் அதிகரித்துள்ளது.
இந்த சிபிஐ பணவீக்கம் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரியில் 4.06 சதவீதமாகவும், 2021 ஜூனில் உச்சபட்சமாக 6.26 சதவீதமாகவும் காணப்பட்டன. அதற்குப் பிறகு நடப்பாண்டு ஜனவரியில்தான் சில்லறைப் பணவீக்கமானது இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது.
உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் முந்தைய டிசம்பரில் 4.05 சதவீதமாக காணப்பட்ட நிலையில், ஜனவரியில் 5.43 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதேசமயம், மொத்தவிற்பனை விலை அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கம் கடந்த ஜனவரி மாதத்தில் 12.96 சதவீதமாக குறைந்துள்ளது. இது, முந்தைய 2021 டிசம்பரில் 13.56 சதவீதமாக காணப்பட்டது. 2021 ஜனவரியில் இப்பணவீக்கம் 2.51 சதவீதமாக இருந்தது என மத்திய அரசின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.