பத்தரைக்கட்டை பிரதேசத்திற்கு குடிநீர் வேலைத்திட்டம் ஆரம்ப நிகழ்வு.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ அவர்களின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தை நடைமுறைப்படுத்தும்
நோக்கில் முன்னெடுக்கப்படும்
“அனைவருக்கும் சுத்தமான குடிநீர்” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பத்தரைக்கட்டை கிராமத்திற்கு குடிநீர் இணைப்பினை வழங்குவதற்கான ஆரம்ப நிகழ்வுகள் (14) திகதி திங்கட்கிழமை மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின், மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பத்தரக்கட்டை கிராமத்திற்கு வழங்கப்படவுள்ள குடிநீர் இணைப்பினை வழங்கும் ஆரம்பக்கட்ட பணிகளையே பாராளுமன்ற உறுப்பினரும்,
மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான சி.சந்திரகாந்தன் ஆரம்பித்துவைத்துள்ளார்.
இவ்வாறு ஆரம்பித்து வைக்கப்பட்ட குறித்த அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக சுமார் 150 குடும்பங்கள் பயனடையவுள்ளதுடன், இதற்காக சுமார் 50 மில்லியன் நிதி முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதே வேளை குறித்த கிராமத்தில் 16 சமுர்த்தி பயனாளிகளுக்கு அரசினால் அதிகரித்து வழங்கப்பட்ட கொடுப்பனவினையும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர் சி.சந்திரகாந்தன் வழங்கிவைத்துள்ளார்.
குறித்த நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர், பிராந்திய நிர்பாசனப் பொறியியலாளர் எம்.குமாரதாஸ்
உட்பட நீர் வழங்கல் அதிகார சபையின் உயரதிகாரிகள் ஏனைய அரச திணைக்களங்களின் அதிகாரிகள், மற்றும் பிரதேச வாசிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
அதே வேளை மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பத்தரக்கட்ட, பாவக் கொடிச்சேனை, பன்சேனை, காந்தி நகர், தாந்தாமலை, கரடியனாறு, ஆயித்தியமலை போன்ற பிரதேசங்களிற்கு 107 கிலோ மீற்றர் தூரத்திற்கு குடிநீர் இணைப்பினை வழங்குவதற்காக 350 மில்லியன் நிதியினை நீர் வழங்கல் அமைச்சின் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ள நிலையிலேயே குறித்த கிராமத்திற்கான குடிநீர் வழங்கும் பணிகள் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர் சி.சந்திரகாந்தன் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.