இந்தியா-வெஸ்ட் இண்டீஸ்: முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் இன்று நடக்கிறது.
ஒரு நாள் தொடரை முழுமையாக வசப்படுத்திய இந்திய அணி 20 ஓவர் தொடரிலும் ஆதிக்கம் செலுத்தும் உத்வேகத்துடன் வியூகங்களை தீட்டுகிறது. இன்னும் 8 மாதத்தில் ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் நடக்கிறது. இந்த உலக கோப்பை போட்டிக்கு இந்திய அணியில் சரியான வீரர்களை அடையாளம் காண்பதற்கு இந்த தொடர் நல்ல அடித்தளமாக அமையும்.
காயத்தால் லோகேஷ் ராகுல் விலகி விட்டதால் ரோகித் சர்மாவுடன், இஷான் கிஷன் தொடக்க வீரராக ஆடுவார் என்று தெரிகிறது. சுழற்பந்துவீசும் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரும் தசைப்பிடிப்பால் ஒதுங்கி இருப்பதால் அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் அல்லது புதுமுக வீரர் ரவி பிஷ்னோய் சேர்க்கப்படலாம். மற்றபடி இந்தியா வலுவாகவே இருக்கிறது.
ஒரு நாள் தொடரில் சொதப்பிய விராட் கோலி 20 ஓவர் கிரிக்கெட்டிலாவது ரன்மழை பொழிவாரா என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். கோலி இன்னும் 73 ரன்கள் திரட்டினால், சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவரான நியூசிலாந்தின் மார்ட்டின் கப்திலை (3,299 ரன்) முந்திவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
50 ஓவர் கிரிக்கெட்டில் பலவீனமான வெஸ்ட் இண்டீஸ், 20 ஓவர் வடிவிலான கிரிக்கெட்டில் மிகவும் பலமிக்கது. சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கில் வென்று அசத்தியது. அந்த அணியில் பொல்லார்ட், நிகோலஸ் பூரன், ஜாசன் ஹோல்டர், ேராமன் பவெல் அதிரடியில் மிரட்டக்கூடியவர்கள். எனவே 20 ஓவர் போட்டி இந்தியாவுக்கு எளிதாக இருக்காது. இந்தியாவுக்கு எதிரான கடைசி இரு ஒரு நாள் போட்டியில் காயத்தால் ஆடாத பொல்லார்ட் நேற்று பயிற்சியில் ஈடுபட்டார். ஒரு வேளை அவர் உடல்தகுதியை எட்டாவிட்டால் நிகோலஸ் பூரன் அணியை வழிநடத்துவார்.
இந்த ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஓரளவு ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் இரவில் போகப்போக பனிப்பொழிவின் தாக்கம் இருக்கும் என்பதால் 2-வதாக பந்து வீசுவதற்கு கடினமாக இருக்கும். அதனால் ‘டாஸ்’ ஜெயிக்கும் அணி முதலில் பந்து வீச்சுக்கு முன்னுரிமை கொடுக்கும். இவ்விரு அணிகளும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 17 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 10-ல் இந்தியாவும், 6-ல் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ரிஷாப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், ஹர்ஷல் பட்டேல், குல்தீப் யாதவ் அல்லது ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல்.
வெஸ்ட் இண்டீஸ்: கைல் மேயர்ஸ், பிரான்டன் கிங், நிகோலஸ் பூரன், பொல்லார்ட் (கேப்டன்), ரோமன் பவெல், ஜாசன் ஹோல்டர், ரொமாரியா ஷெப்பர்டு, பாபியன் ஆலென், ஒடியன் சுமித், அகேல் ஹூசைன், ஷெல்டன் காட்ரெல்.
கோலிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ரோகித் சர்மா
இந்திய வீரர் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடித்து 2 ஆண்டுக்கு மேலாகி விட்டது. சமீபத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 3 ஆட்டத்தில் 26 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாற்றம் கண்டார். அவரது பார்ம் குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மாவிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ரோகித் சர்மா, ‘ேகாலியை பற்றி தேவையில்லாமல் விவாதிப்பதை நீங்கள் (ஊடகத்தினர்) நிறுத்தினாலே எல்லாம் சரியாகி விடும் என்று நினைக்கிறேன். கோலியை பொறுத்தவரை மனதளவில் நன்றாக இருக்கிறார். 10 ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேச அணியில் அங்கம் வகிக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டுக்காக அதிக நேரத்தை செலவிடும் அவருக்கு நெருக்கடியான தருணங்களை எப்படி கையாள வேண்டும் என்பது நன்கு தெரியும். எனவே நீங்கள் கொஞ்சம் அமைதியாக இருந்தாலே எல்லாம் சரியாக நடக்கும்’ என்றார். விராட் கோலியிடம் நம்பிக்கை குறைவாக இருக்கிறதா? என்று கேட்ட போது, நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்று காட்டமாக திருப்பி கேட்டார்.
‘அணியில் பரிசோதனை முயற்சிகளுக்கு நேரமில்லை. உலக கோப்பையில் விளையாட வாய்ப்புள்ள வீரர்களுக்கு களம் காண போதுமான வாய்ப்பு அளிக்க வேண்டும்’ என்று மற்றொரு கேள்விக்கு பதில் அளித்தார்.